அமைச்சர் பொன்முடி மகன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு

அமைச்சர் பொன்முடி மகன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு
X
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

இந்தியாவின் பழம்பெரும் கிரிக்கெட் சங்கங்களில் ஒன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். கடந்த 1932-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இச்சங்கம் தற்போது 90-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியாவின் பண பலம் படைத்த கிரிக்கெட் சங்கங்களில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் ஒன்று என்றால் மிகையில்லை.

பணமும் பெருமையும் மிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தலைவர் பதவிக்கு விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய துணைத்தலைவராகவும் இருக்கும் அசோக் சிகாமணியும், அவரை எதிர்த்து பிரபுவும் போட்டியிட்டனர்.

இதில் அசோக் சிகாமணி, முன்னாள் தலைவரும் பலம் வாய்ந்த நிர்வாகியாகவும் அறியப்பட்ட இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சக்தி வாய்ந்த மனிதர் யார் என்றால், கிரிக்கெட் தெரிந்தவர்கள் அனைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் என சொல்லிவிடுவர். அந்த அளவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக 2002-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார். அதன்பின், பல்வேறு சர்ச்சைகள் அவரைச் சுற்றி தொடர்ந்தாலும், நேரடி பதவியில் அவர் இல்லாவிட்டாலும், அவர் கைகாட்டும் நபர்தான், தலைவராக இருந்து வருகின்றனர்.

விதிகளை மீறி அசோக் சிகாமணி உள்ளிட்ட சிலர் போட்டியிடுவதால், இத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டதால், இது சர்ச்சைக்குரிய தேர்தலாக மாறியது. இந்நிலையில், தமது வேட்புமனுவை பிரபு வாபஸ் பெற்றதால், டாக்டர் அசோக் சிகாமணி போட்டியின்றி தலைவராகத் தேர்வானார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழனியும், பொருளாளராக ஸ்ரீனிவாச ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டனர்.

பிரபு தலைமையிலான எதிரணி போட்டியாளர்கள் அனைவரும் வாபஸ் பெற்றதால் செயலாளர், பொருளாளரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

2019-ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் மகள் ரூபா தேர்வு செய்யப்பட்டார். நீண்டகாலமாக கிரிக்கெட் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் முக்கியமான பொறுப்புகளில் இருந்துவரும் அசோக் சிகாமணி, அப்போதே தலைவர் பதவிக்கு முயற்சி செய்தார். ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை துணைத்தலைவராக்கினார் ஸ்ரீநிவாசன்.

இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!