வங்க கடலில் 21-ம் தேதி உருவாகிறது 'அசானி' புயல்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள வரைபடம்.
இதுகுறித்து சென்னை வானிைலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது.
இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 19 ஆம் தேதி காலை நிலவக்கூடும். இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது 21 ஆம் தேதி மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 22 ஆம் தேதி காலை நிலைபெறக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
17.03.2022, 18.03.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19.03.2022: அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20.03.2022: அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21.03.2022: அந்தமான் கடல் பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் இப்பகுதிகளில் கடல் சீற்றதுடன் காணப்படும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், வங்காள விரிகுடா இந்த மாதத்தின் 2வது வெப்பமண்டல அமைப்புக்கு தயாராகி வருகிறது. இந்த முறை இந்திய நிலப்பரப்பில் இருந்து விலகி உள்ளது. வங்காள - மியான்மர் கடற்கரையை நோக்கி இலக்காக இருக்கலாம். இதற்கிடையில், இது வரும் நாட்களில் சென்னை உட்பட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வெப்பமடையும் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu