மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்-சகோதரி தீக்குளிக்க முயற்சி

மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்-சகோதரி தீக்குளிக்க முயற்சி
X
அரியலூரில் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்- பெண்ணின் பெற்றோர்கள் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரது சகோதரி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

அரியலூரில் மகளிர் காவல் நிலையத்தில், இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். பெண்ணின் பெற்றோர்கள் உள்ளிட்ட உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவரது சகோதரி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டம், சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுரோஜா (21) சென்னையில் வேலை செய்து வந்த இவருக்கும், சென்னையை சேர்ந்த வல்லரசு என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுகளத்தூர் கிராமத்திலுள்ள தனது பெற்றோர் வீட்டிலிருந்த அழகுரோஜா, காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால், மனமுடைந்து நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி, அரசுப்பேருந்தில் அரியலூருக்கு வந்துள்ளார்.

அழுதவாறே பேருந்தில் அமர்ந்திருந்த அழகு ரோஜாவிடம் நடத்துனர் பேச்சு கொடுத்து, வீட்டை விட்டு கோபித்து கொண்டு வந்ததை கேட்டறிந்து பாதுகாப்புக்காக அழகுரோஜாவை அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை விட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து அழகுரோஜா செல்போன் மூலம் அளித்த தகவலின் பேரில், அவரது காதலன் வல்லரசு அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழகுரோஜாவை சந்திக்க வந்துள்ளார். இதனை அறிந்த மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரிடமும் விசாரித்ததில், அழகுரோஜாவும்-வல்லரசும் காதலர்கள் என்பதும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதும் தெரிய வந்துள்ளது. இதனை கேட்ட மகளிர் காவல் நிலைய போலீசார் (இன்று) காலை பேசி கொள்ளலாம் என கூறி வல்லரசை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அழகு ரோஜாவின் பெற்றோர்கள் உள்ளிட்ட உறவினர்கள் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அழகுரோஜாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், திருமணம் செய்து வைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் இடையே அழகுரோஜாவின் சகோதரி அன்புரோஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

இதனைக் கண்ட மகளிர் காவல் நிலைய போலீசார் அன்புரோஜாவை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி அழைத்து சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென அவரது சகோதரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!