ஜெயங்கொண்டத்தில் உலக மண்வள தினத்தையொட்டி விவசாயிகளுக்கான கருத்தரங்கம்
ஜெயங்கொண்டத்தில் நடந்த உலக மண் வள தினவிழாவில் கண்ணன் எம்.எல்.ஏ. விவசாயி ஒருவருக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்தியா முழுவதும் டிசம்பர் 5-ஆம் தேதி உலக மண் வள தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரியலூர் மாவட்டம் சோழமாதேவி கிராமத்தில் அமைந்துள்ள கிரீடு இந்திய வேளாண் மையத்தின் சார்பில் ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உலக மண் வள தினத்தையொட்டி விவசாயிகளுக்காக கருத்தரங்கம் மற்றும் விவசாய கண்காட்சி நடைபெற்றது.
கருத்தரங்கில் மண்ணை பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம் அதனால் ஏற்படக்கூடிய பயன்கள், இயற்கை வேளாண்மை வேளாண் சார்ந்த தொழில்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் நடனசபாபதி பேசும் போது, ஒவ்வொரு பயிர் சாகுபடிக்கும் மண்ணை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் மண்ணின் தன்மை குறித்து தெரிந்துக் கொள்ளலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு எந்த பயிர்கள் சாகுபடி செய்யலாம் என்பது குறித்து தெரிவிக்கப்படும். மண் பரிசோதனை செய்யும் விவசாயிகளுக்கு மத்திய அரசின் மண்வள அட்டை வழங்கப்படும். மண்ணை பரிசோதனை செய்து அதற்கேற்றார்போல் உரம் இடுவதால் சாகுபடி செலவு பெருமளவில் குறைந்து, இரட்டிப்பு மகசூல் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
மேலும் விவசாய உற்பத்தி பொருட்களை அப்படியே சந்தைப் படுத்தாமல் அதனை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி விற்பதன் மூலம், அதிகப்படியான வருமானம் பெறலாம். அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்த வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும். இவ்வகையான திட்டங்களுக்கு மத்திய அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திட்டத்தையும் விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்டத்தில் முன்னோடி விவசாயிகள் புதிய கருவிகள் கண்டுபிடிப்பு, வேளாண் சார்ந்த தொழில்கள் சிறந்து விளங்கும் விவசாயிகள் என பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் இந்திய வேளாண் அறிவியல் மையத்தின் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
கூட்டரங்கில் மதிப்பு கூட்டு உற்பத்தி பொருட்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் இயற்கை விவசாயம் நவீன விவசாயக் கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி அழகுகண்ணன் உள்ளிட்ட மைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu