காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீஸ்உதவியுடன் கரம்பிடித்த பெண்

காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீஸ்உதவியுடன் கரம்பிடித்த பெண்
ஜெயங்கொண்டம் அருகே காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீஸ் உதவியுடன் கரம்பிடித்த பெண்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 26). கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சத்யா(20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக சத்யாவிடம் ஆசை வார்த்தை கூறி, அவருடன் வினோத்குமார் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. இதில் சத்யா கர்ப்பமானார். இதையடுத்து அவர் வினோத்குமாரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் பலமுறை கேட்டுள்ளார். இதற்கு வினோத்குமாரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சத்யாவை திருமணம் செய்யவில்லை.

இதையடுத்து சத்யா ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில், தான் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், தன்னை கர்ப்பமாக்கிய வினோத்குமாரை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரியும் புகார் மனு அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சம்பந்தப்பட்டவர்களிடமும், ராங்கியம் கிராமத்திலும் விசாரணை நடத்தினார். மேலும் வினோத்குமாரின் குடும்பத்தினரிடமும் வினோத்குமாரிடமும், அதேபோல் சத்யா குடும்பத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சமரசம் ஏற்பட்டு 2 குடும்பத்தினரும் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில், ராங்கியம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டர் சுமதி முன்னிலையில் வினோத்குமாரும், சத்யாவும் மாலை மாற்றி கொண்டனர். அவர்களை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதையடுத்து புதுமண தம்பதி தங்கள் குடும்பத்தினருடன் வீடு திரும்பினர்.

Tags

Read MoreRead Less
Next Story