நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் எவ்வித நிபந்தனையும் இன்றிவழங்க வேண்டும்

நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் எவ்வித நிபந்தனையும் இன்றிவழங்க வேண்டும்
X

உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகளிடம், மீண்டும் நிலத்தை ஒப்படைப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் கோட்டாட்சியர் அமர்நாத் தலைமையில் நடைபெற்றது.


பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் வழங்க வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் வழங்க வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பழுப்பு நிலக்கரி திட்டம் தொடங்குவதற்காக செங்குந்தபுரம், கல்லாத்தூர், தேவனூர், கீழகுடியிருப்பு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாய நிலங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதுவரை பழுப்பு நிலக்கரி திட்டம் தொடங்கப்படாத நிலையில், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பல ஆண்டு காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகளிடம், மீண்டும் நிலத்தை ஒப்படைப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் கோட்டாட்சியர் அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. அப்போது விவசாயிகளிடம் நிலத்தை மீண்டும் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், நிலத்திற்கு விவசாயிகள் வாங்கிய இழப்பீடு தொகையை திரும்ப வழங்க வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலம் கொடுத்த விவசாயிகள், 25 ஆண்டுகளுக்கு முன்பு பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நிலத்தை கொடுத்துவிட்டு வாழ்வாதாரம் இன்றி இத்தனை ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறோம்.

நிலத்தை தமிழக அரசுக்கு எழுதிக் கொடுத்து விட்டதால், அரசு சார்பில் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய எந்தவித சலுகைகளும், மானியத்திட்டங்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் அமர்நாத் தெரிவித்தார்.

Tags

Next Story