நம்ம ஊரு சூப்பரு திட்ட தூய்மைப்பணிகளை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
பொன்பரப்பி கிராமத்தில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தில் அய்யனார் குளம் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணைத் தொகுப்பு சேவை மையம் மற்றும் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் தூய்மைப் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், பொன்பரப்பி கிராமத்தில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தில் அய்யனார் குளம் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட 'நம்ம ஊரு சூப்பரு" என்ற திட்டம் 20.08.2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 03.09.2022 முதல் 16.09.2022 வரை நீர், சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவை குறித்து மக்களிடையே சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு, நீர் நிலைகளை சுத்தம் செய்ய செந்துறை ஒன்றியம், பொன்பரப்பி ஊராட்சியில் உள்ள சுய உதவிக்குழுக்களால் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்றைய தினம் பொன்பரப்பி கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலிருந்தும் 15 சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பொன்பரப்பி ஊராட்சியில் உள்ள அய்யனார் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். மேலும், கிராமங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்பு என்பது விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் குடும்பங்களுக்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாழ்வாதார நடவடிக்கைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது ஆகும். அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் பொன்பரப்பி, கீழமாளிகை, சிறுகளத்தூர் ஆகிய ஊராட்சிகளை ஒன்றிணைத்து பொன்பரப்பியில் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்பு ஆரம்பிக்கப்பட்டு பொன்பரப்பி ஊராட்சியில் வாழ்வாதார சேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்றைய தினம் துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
இந்த வாழ்வாதார சேவை மையத்தில் விவசாயிகள் வேளாண்மை குறித்த தகவல்களை பெறுவதற்கு தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை வேளாண்மைக்கு உரிய பூச்சி விரட்டி மற்றும் உயிரி உரங்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு சிறு வேளாண் கருவி வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதி பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu