இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
X

மர்மமான முறையில் உயிரிழந்த கமலாதேவி.

உடையார் பாளையம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் நடந்தது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புதுத் தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி கமலாதேவி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடமான நிலையில் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தினேஷ் சென்னையில் வேலை செய்த போது வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையும் ஏற்பட்டது.


இந்நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கமலா தேவி குடும்பத்தினருக்கு தினேஷ் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கமலாதேவி பெற்றோர் தனது மகளின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும், கணவன் தினேஷ் அவரது பெற்றோர் மற்றும் உடன் பிறந்த சகோதரிகள் ஆகியோர் அடித்து தூக்கில் தொங்க விட்டதாக புகார் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கமலாதேவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கமலாதேவி பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது கமலாதேவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். அனாதையாக உள்ள உயிரிழந்த கமலா தேவியின் ஒன்றரை வயது மகனுக்கு, தினேஷ் சொத்துக்களை எழுதி தர வேண்டும் என வலியுறுத்தினர்.

விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!