ஏரியில் குளிக்கச் சென்ற ஸ்வீட் மாஸ்டர் பலி: உடலை தேடும் பணி தீவிரம்

இலையூரில் உள்ள வண்ணானேரி ஏரியில் குளிக்க சென்ற ஸ்வீட் மாஸ்டர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் இலையூர் கிராமத்தில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் 2 வருடமாக மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். வேலை முடிந்து வழக்கமாக இலையூர் பகுதியில் உள்ள வண்ணானேரி ஏரியில் குளித்து செல்வது வழக்கம். அதேபோல் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு ஏரியில் குளிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை கரையோரம் நிறுத்திவிட்டு படித்துறையில் ஆடைகளை கழட்டி வைத்துவிட்டு குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இருப்பார் என தெரியவருகிறது. இரவு குளிக்கச் சென்றவர் கடைக்கு வராததால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலையடுத்து சந்தேகத்தின் பேரில் ஏரியில் வந்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த சட்டை, கைலி, செருப்பு மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் இருந்துள்ளது. ரமேஷை மட்டும் காணவில்லை. இதனையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார், ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேரமாக தேடியும் உடலை மீட்க முடியாததால் தேடும் பணியை தீயணைப்புத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Tags

Next Story
ai in future agriculture