ஜெயங்கொண்டம் அருகே ஓடை ஆக்கிரமிப்பு: 25 வீடுகளை இடித்து தள்ளிய அதிகாரிகள்

ஜெயங்கொண்டம் அருகே தர்மசமுத்திரம் கிராமத்தில் செங்கால் ஓடை நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் அய்யப்பநாயக்கன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தர்மசமுத்திரம் கிராமத்தில் செங்கால் ஓடையை ஆக்கிரமித்து கான்கிரீட் வீடுகள், கூரை வீடுகள் என இருபத்தி ஐந்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி ஆடு, மாடு, கோழிகளை கையில் வைத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், வீடுகளை காலி செய்ய அறிவுறுத்தி வீடு வீடாகச் சென்று வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியதாக தகவல் பரவியது.
இதையடுத்து, ஆட்டோ மூலம் ஒலி பெருக்கிக் கொண்டு அறிவிப்பு செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த வாரம் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும், அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் ஜெயங்கொண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் தலைமையில் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 300-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, 25 வீடுகளும் அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் கூறுகையில், எங்களுக்கு வீடுகளை காலி செய்ய 10.ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தும் திடீரென வீடுகளை முன்கூட்டியே அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இதனால், தாங்கள் தங்குவதற்கும், உணவு சமைப்பதற்கும் இடமின்றி தவித்து வருவதாகவும், மழை வந்தால் எங்கே தஞ்சம் அடைவது, எப்படி சமைத்து சாப்பிடுவது எனவும் மிகுந்த வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.செங்கால் ஓடை நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து வருவாய்த்துறையினர் தரைமட்டமாக்கிய சம்பவம் சுற்றுவட்டார கிராமங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu