குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
X

குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட கோடாலி கிராமத்தினர்.


கோடாலி கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் வடக்குத் தெருவில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதிலும் கடந்த 15 தினங்களாக தொடர்ந்து குடிநீர் வரவில்லை எனத் தெரிகிறது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று குடிநீர் எடுத்து வருவதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன், அணைக்கரை செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து ஊரக வளர்ச்சித்துறை மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், இன்னும் பத்து தினங்களுக்குள் புதிய போர்வெல் அமைத்து முறைப்படி குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொது மக்கள் நடத்திய இப்போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!