ஊருக்குள் புகுந்த தண்ணீர்: தெருவில் நாற்றுநட்டு மக்கள் போராட்டம்
அரியலூர் மாவட்டம் சோழமாதேவி கிராமத்தில், ஏரி ததும்பி தெருவில் வரும் தண்ணீரை கட்டுப்படுத்தக்கோரி, தெருவில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில், அம்மையன் தெரு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி குடியிருப்பு பகுதிகளையொட்டி, சின்ன ஏரி, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால், சின்ன ஏரியானது நிரம்பி வழிகிறது. அதிலிருந்து வெளியேறும் உபரி நீரானது போதிய வடிகால் வசதியின்றி, தெருக்களில் புகுந்து குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்தது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, பொதுமக்களே களத்தில் இறங்கி மழைநீரை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது திடீரென அங்கிருந்த பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், கடந்த 50 ஆண்டுகளாக இந்த பகுதியில் சாலைவசதி இல்லை, மழை நீர் தங்கு தடையின்றி செல்வதற்கு போதிய வடிகால்வசதி இல்லை. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்வதற்கு போதிய மதகுகள் இல்லை. இதன் காரணமாக, மழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் இதே நிலையை சந்தித்து வருகிறோம் என்றனர். தகவல் அறிந்து வந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், உடனடியாக ஜேசிபி எந்திரம் மூலம் மழைநீரை தற்காலிகமாக வெளியேற்றினர். மேலும் சாலை மற்றும் மதகு வசதி செய்து தரப்படும் என பொதுமக்களிடத்தில் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu