விவசாயியை வெட்டிய ரவுடி அடித்து கொலை: இருவர் கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் 44 வயதான கொளஞ்சி. இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. ரவுடி கொளஞ்சி போலீசாருக்கு பயந்து இரவு நேரத்தில் முந்திரி காடுகளில் தூங்குவது வழக்கம். அதேபோல் இவர் புதுப்பாளையத்தில் இருந்து இடையக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள முந்திரி தோட்டத்தில் மதுபோதையில் அங்கே இருந்த கட்டிலில் படுத்து தூங்கி உள்ளார். முந்திரி தோப்பிற்கு வழக்கமாக காவலுக்கு சென்ற தர்மராஜ் தனது கட்டிலில் மர்ம நபர் தூங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரை எழுப்பி அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் குடிபோதையில் இருந்த கொளஞ்சி எழுந்து செல்ல மறுத்ததோடு தர்மராஜிடம் தகராறு செய்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து தர்மராஜ் தனது உறவினர்களான லோகேஸ்வரன் (26) பிரபாகரன் (30) சக்திவேல்(22) ஆகிய 3 பேரையும் முந்திரி காட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனைக் கண்ட கொளஞ்சி அங்கிருந்து தப்பிச் சென்று முந்திரி மரத்தில் மறைந்துள்ளார். ஆனால் 4 பேரும் தேடி சென்று கொளஞ்சியை பிடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி தான் வைத்து இருந்த அரிவாளால் தர்மராஜை வெட்டி உள்ளார்.
இதனைக் கண்ட உறவினர்கள் கொளஞ்சியை சுற்றி வளைத்து தாக்கினர். இதில் கொளஞ்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தர்மராஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று லோகேஸ்வரன், பிரபாகரன் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரனை நடத்தி வருகின்றனர். ரவுடி கொளஞ்சியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு முகாமிட்டுள்ள அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மேல்விசாரனையை தொடங்கியுள்ளார். விவசாயியை வெட்டிய ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu