ஜெயங்கொண்டம் அருகே மகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தந்தை கைது
பெட்ரோல் குண்டு வீசிய வீடு.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடியை சேர்ந்தவர் அபிபுல்லா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, தற்போது ஜெயங்கொண்டத்தில் கார் ஓட்டுனராக இருந்து வருகிறார். இவருக்கும், இவரது தந்தையான ஜெய்னுலாப்தீன் என்பவருக்கும் இடப்பிரச்சினை குறித்து அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அபிபுல்லா நேற்று இரவு வழக்கம் போல் தனது குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நள்ளிரவில் இவரது வீட்டின் முன்பு பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் வெளியே வந்து பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
மேலும் அங்கு 3 பெட்ரோல் பாட்டில்களும், பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து சிதறி இருந்தன. பின்னர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அபிபுல்லா புகார் அளித்தார். இதையடுத்து அரியலூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் டிஎஸ்பி கலை கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டு, அபிபுல்லா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதை ஜெய்னுலாப்தீன் ஒப்புக்கொண்டார். மேலும் தன்னை, தரக்குறைவாகவும், அவமரியாதையாகவும் நடந்து கொண்டதால் மகன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் போலீசார் வாக்குமூலத்தில் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகன் வீட்டில் தந்தையே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu