சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த மகனின் உறுப்புகளை தானம் அளித்த பெற்றோர்
மூளைச்சாவு அடைந்த இளைஞர் கார்த்தி
அரியலூர் - சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த மகனின் உறுப்புகளை பெற்றோர்கள் தானம் அளித்து மனித நேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவரது ஒரே மகன் கார்த்தி . இவர் திருவள்ளூரில் உள்ள நிறுவனத்தில் சுமார் ஒரு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கார்த்தி, இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரியில் மோதி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த கார்த்திக்கு, மூளைச்சிதைவு ஏற்பட்டதாக மருத்துவர் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு மகனையும் இழந்து விட்டோமே என கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்நிலையில் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதனையடுத்து கார்த்தியின் இதயம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள், மியாட் மருத்துவமனை மூலம் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை முடித்து பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
சோழமாதேவி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட கார்த்தியின் உடல், கிராம மக்களின் அஞ்சலிக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. மகனை விபத்தில் இழந்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், தங்களது மகன் கார்த்தி பலரது உடம்பின் வாயிலாக உயிரோடு இருப்பதாக கருதுவதாக கூறி கார்த்தியின் பெற்றோர்கள் கதறி அழுதது, காண்பவர்களை கண்கலங்க வைத்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu