தனியார் இடத்தை கையகப்படுத்த அரசுக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட ஆதிச்சனூர் கிராம மக்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆதிச்சனூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்குவதற்காக வேண்டி, தனியாருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் இப்பிரச்சனை தொடர்பாக இருதரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையில் இன்று பிரச்சனைக்குரிய தனியாருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அளப்பதற்காக ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அப்போது இடத்தினை அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடத்தின் உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்து சாலை திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அரியலூர்- சுத்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், நீதிமன்ற தடை உத்தரவை இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள், நீதிமன்ற தடை உத்தரவை தருகிறோம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதிகாரிகள் தற்காலிகமாக இடத்தினை அளக்காமல் சென்று விட்டனர்.
பின்னர் இதில் உடன்பாடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu