கோவில் சிலையை உடைத்த மர்ம நபர்கள்..! காவல்துறை விசாரணை..!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அறங்கோட்டை கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வள்ளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவானது 16 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் 15 வது நாளான அதிகாலை கோயில் முன்பு ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்வதற்காக பிரத்தியேகமாக மரத்தாலான நொண்டி வீரன் உருவம் பொருந்திய சிலை வடிவமைக்கப்பட்டு அதற்கு அலங்காரங்கள் செய்து வைத்திருந்தனர்.
மேலும் அருகிலுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் நேற்று இரவு இறுதி நாள் காளியாட்டம் நடைபெற்ற நிலையில் அனைவரும் காளியை தரிசிக்க சென்ற நிலையில், கோவிலில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலின் முன்பு இருந்த மரத்தலான நொண்டிவீரன் சிலையை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதில் மர சிலையில் உள்ள குதிரையின் கால் மற்றும் முகம் உள்ளிட்டவை துண்டாக உடைந்து உள்ளது. மேலும் மரக்குதிரை சிலை மற்றும் வீரன் சிலையில் பல்வேறு இடங்களில் அடித்து சேதப்படுத்தி உள்ளனர். காலை இறுதி நாள் திருவிழா நடைபெற உள்ள நிலையில் ஊர்வலம் செல்லும் மர சிலை உடைந்து உள்ளதை கண்டு அக்கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விக்கிரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரசிலை உடைப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விக்கிரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கலைக் கதிரவன் ஆய்வு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu