ஜெயங்கொண்டம் அருகே காதல் ஜோடிக்கு போலீஸ் அறிவுரைப்படி திருமணம்
ஜெயங்கொண்டம் அருகே போலீஸ் அறிவுரைப்படி காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமம் பெரியத் தெருவைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவரது மகன் கரண். இவர் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவர் வீரசோழபுரம் காமராஜர் நகரை சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகள் நந்தினி (பி.எஸ்.சி. பட்டதாரி) என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் கரண் நந்தினியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் நந்தினி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி கரண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் முறையிட்டுள்ளார். அப்போது அவர்கள் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டனர்.
இதனால் செய்வதறியாத நந்தினி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கரணை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி புகார் மனு அளித்தார். நந்தினி அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேசி விசாரணை செய்தார். அப்போது கரண் குடும்பத்தினர் நந்தினியை திருமணம் செய்ய மறுத்து விட்டனர். தொடர்ந்து கரண் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், கரண் மட்டும் நந்தினியை திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் அளித்தார்.
அதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, கரண் குடும்பத்தினரிடம் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டது. பின்னர் கரண் நந்தினி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
பின்னர் இரு குடும்பத்தினர் ஒப்புதலோடு ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாலையும் மாங்கல்யத்துடனும் வந்த புதுமண காதல் ஜோடிகளை, அறிவுரைகள் கூறி நந்தினியின் பெற்றோர்களோடு அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu