உடையார்பாளையத்தில் தேர்தல் முன்விரோதத்தால் வக்கீல் கத்தியால் குத்தி கொலை
கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் அறிவழகன்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அதே தெருவில் வசிக்கும் இலக்கியா பிரபு என்பவர் உடையார்பாளையம் பேரூராட்சியில் 15வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக தென்னைமரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அறிவழகன் செயல்பட்டதாக தெரிகிறது. இதற்கு அறிவழகன் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிவழகனை கண்டித்தனர். இதில் அறிவழகனுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பலமுறை அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து அறிவழகன் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஆத்திரமடைந்த அறிவழகன் உறவினர்கள் இன்று காலை பெட்ரோல் குண்டு மற்றும் ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்தனர். அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த அறிவழகனை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தபோது அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது. பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த அறிவழகனின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலை குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu