உடையார்பாளையம் அருகே பணத்திற்காக தலைமை ஆசிரியரை கொலை செய்த இளைஞர் கைது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செட்டியார் தெருவைச் சேர்ந்த செல்வராஜ். இவர் கடந்த 10 வருடங்களாக ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 05.10.2022 அன்று மாலை பள்ளி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது, உடையார்பாளையம் த.சோழங்குறிச்சி சாலையில் இடது காது அருகே வெட்டப்பட்டு, உயிரிழந்து கிடந்தார்.
சம்பவம் தொடர்பாக செல்வராஜ் அவர்களின் மனைவி உஷாராணி அளித்த புகாரின் அடிப்படையில், உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரி ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் (உடையார்பாளையம் பொறுப்பு) சண்முகசுந்தரம் முதல் கட்ட புலன் விசாரணை தொடங்கினார்.
குற்றசம்பவம் நடைபெற்ற இடத்தை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். மேலும் முதல்கட்ட விசாரணை குறித்து கேட்டறிந்தார்கள்.
இதனைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் வசந்த் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
விசாரணையில் ஜெயங்கொண்டம் காமராஜபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் வெங்கடேசன் (23) என்பவர், தனது பணத்தேவைக்காக தலைமை ஆசிரியரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட பொழுது, தலைமை ஆசிரியர் தர மறுக்கவே வெங்கடேசன் கோபத்தில் தான் வைத்திருந்த பட்டாக் கத்தியால் தலைமை ஆசிரியரை தாக்கிய பொழுது உயிரிழந்தார்.
அப்போது அந்த வழியாக வாகனங்கள் மற்றும் ஆட்கள் வந்ததால் வெங்கடேசன் உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றார்என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இன்று ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் வசந்த் தலைமையிலான தனிப் பிரிவு படையினர் சோழங்குறிச்சி சிவன் கோவில் அருகே வெங்கடேசனை கைது செய்ய முற்படும் பொழுது, வெங்கடேசன் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதனையடுத்து காவலர்கள் வெங்கடேசனை விரட்டிப் பிடித்து, கைது செய்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் வெங்கடேசன் பயன்படுத்திய பட்டாக்கத்தி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu