ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டிற்கு நாளை மறு வாக்குப்பதிவு
ஜெயங்கொண்டத்தில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றி நகராட்சி ஆணையர் சுபாஷினி வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 16வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரின் சின்னத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நாளை இவ்வார்டுக்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 108 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 21 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 13502 ஆண்வாக்காளர்கள் மற்றும் 14540 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 28042 வாக்காளர்களில், 10211 ஆண் வாக்காளர்கள் மற்றும் 11224 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 21435 வாக்காளர்கள் நேற்று வாக்களித்துள்ளனர். 76.44 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16வது வார்டிற்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16வது வார்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த மாவட்ட நிர்வாகமும், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சி 16வது வார்டில் பிரதான கட்சிகளில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக இதயராணி கைசின்னத்திலும், அ.தி.மு.க. வேட்பாளராக மலர்விழி இரட்டைஇலை சின்னத்திலும், பா.ம.க. வேட்பாளராக இந்திராகாந்தி மாம்பழம் சின்னத்திலும், அ.ம.மு.க. வேட்பாளராக ரோஸ்மா பிரசர்குக்கர் சின்னத்திலும், சுயேட்சை வேட்பாளர்களாக விஜயலெட்சுமி மறைமுருக்கி(ஸ்பேனா) சின்னத்திலும், சுந்தராபாய் தீப்பெட்டி சின்னத்திலும் சேர்த்து 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஸ்டேட்பேங்க் காலனி, சீனிவாசாநகர், இந்திராநகர், ஜோதிபுரம், கருப்பையா நகர், சிதம்பரம்ரோடு, கல்விகிராமம் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 16வது வார்டில் 1640 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் நேற்று 1034பேர் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயலெட்சுமி என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள மறைமுருக்கி(ஸ்பேனர் சின்னம்) தபால் வாக்குச்சீட்டுகளில் ஆணிசின்னமாக பதிவிடப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட மறைமுருக்கி(ஸ்பேனர்) சின்னம் சரியாக பதிவிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்புகார் தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளதால் இவ்வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற அதே இடத்தில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்திடவும், காலை 7மணிமுதல் மாலை 5மணிரை பொதுவாக்காளர்களும், மாலை 5மணி முதல் 6மணிவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், நகராட்சி ஆணையர் சுபாஷினியும் செய்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சி 16வது வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு நாளை நடைபெறும் மறுவாக்குப்பதிவு குறித்த தகவல்களை கொண்டுசேர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் வாக்குப்பதிவு நடத்துவதற்கான இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்பு காவலர்கள் ஆகியோரை தயார் செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu