ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கியது
ஜெயங்கொண்டம் நகராட்சி 16வது வார்டிற்கு இன்று மறு வாக்குப்பதிவு தொடங்கியது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண்.16-க்கான வாக்குச்சாவடி 16 (ஆண்), 16 (பெண்) ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளுக்கான சுயேட்சை வேட்பாளர் விஜயலெட்சுமி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான மறைதிருக்கி (ஸ்பேனர்)-க்கு பதிலாக திருகுஆணி (ஸ்குரு) என தவறுதலாக பதியப்பட்டு நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வேட்பாளர் விஜயலெட்சுமி தேர்தல் ஆணையத்திற்கு புகார்மனு அளித்தார்.
இதன்பேரில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜெயங்கொண்டம் நகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண்.16-க்கான வாக்குச்சாவடி 16 (ஆண்), 16 (பெண்) ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுதேர்தல் நடத்த ஆணையிட்டது.
இந்த மறு வாக்குப்பதிவில் ஜெயங்கொண்டம் நகராட்சி 16வது வார்டில் பிரதான கட்சிகளில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக இதயராணி கைசின்னத்திலும், அ.தி.மு.க. வேட்பாளராக மலர்விழி இரட்டைஇலை சின்னத்திலும், பா.ம.க. வேட்பாளராக இந்திராகாந்தி மாம்பழம் சின்னத்திலும், அ.ம.மு.க. வேட்பாளராக ரோஸ்மா பிரசர்குக்கர் சின்னத்திலும், சுயேட்சை வேட்பாளர்களாக விஜயலெட்சுமி மறைமுருக்கி(ஸ்பேனர்) சின்னத்திலும், சுந்தராபாய் தீப்பெட்டி சின்னத்திலும் சேர்த்து 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஸ்டேட்பேங்க் காலனி, சீனிவாசாநகர், இந்திராநகர், ஜோதிபுரம், கருப்பையா நகர், சிதம்பரம்ரோடு, கல்விகிராமம் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 16வது வார்டில் 1640 வாக்காளர்கள் உள்ளனர்.
அதன்படி, இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. (மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள்). வாக்குப்பதிவின்போது அழியாத மை இடது கை நடுவிரலின் மீது வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் 16-வது வார்டில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாக்களிக்கும் வகையில் இன்று விடுமுறை என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 16வது வார்டிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சரிபார்க்கும் பணி 7மணிக்கு நடைபெற்றது. இதன்பின்னர் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு முககவசம், கையுறை ஆகியவை வழங்கப்பட்டு ஒவ்வொருவராக வாக்களித்து வருகின்றனர்.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் பணிகளை ஜெயங்கொண்டம் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான சுபாஷினி மற்றும் பாதுகாப்பு பணிகளை டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையில் போலிசார் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்
ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16வது வார்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவாக்குச்சாவடிகளில் நேற்றுமுன்தினம் 1034 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu