பெற்றோருக்கு பயந்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்

ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி சரண் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமம் குருநாதன் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ரஞ்சித்குமார் (22). இவர் பி.எஸ்சி. முடித்து விட்டு கேட்டரிங் வேலை செய்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் வெண்ணை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் மகள் ஆர்த்தி (21) லேப் டெக்னீசியனாக பாண்டிச்சேரியில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
ரஞ்சித்குமாரும் ஆர்த்தியும் பாண்டிச்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதில் பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனால் கடந்த 21ஆம் தேதி ரஞ்சித்குமார் ஆர்த்தியை சென்னைக்கு அழைத்துச் சென்று அங்கு உள்ள கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் ஆர்த்தியின் பெற்றோர்கள் மகளை காணவில்லை என புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் ரஞ்சித் குமாருக்கும் ஆர்த்திக்கும் திருமணம் நடந்தது இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியவந்தது. இதையடுத்து பெண்ணின் பெற்றோருக்கு பயந்து புதுமண தம்பதிகள் இருவரும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி இருதரப்பு பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர். ஆர்த்தியின் பெற்றோர் தங்களுடன் வருமாறு அழைத்தபோது, ஆர்த்தி கணவன் ரஞ்சித்குமாருடன் செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் ரஞ்சித்குமார் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி ஆர்த்தியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu