ஜெயங்கொண்டம் நகராட்சிதேர்தல்: நீண்டநாள் கோரிக்கை பற்றிய கண்ணோட்டம்

ஜெயங்கொண்டம் நகராட்சிதேர்தல்:  நீண்டநாள் கோரிக்கை பற்றிய கண்ணோட்டம்
X
ஜெயங்கொண்டத்தில் அனைத்து இடங்களிலும் தட்டுப்பாடு இல்லாத குடிநீர் வழங்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திரசோழன் பல்வேறு கப்பல் படை, யானைப் படை, குதிரைப் படைகளை கொண்டு கடல் மூலம் பல நாடுகளுக்குச் சென்று வெற்றி பெற்றதன் அடையாளமாக ஜெயம் கொண்டான் எனும்பெயர் பெற்றார். அதன் அடையாளமாக ஜெயங்கொண்ட சோழபுரம் எனும் பெயர் பெற்றது.

கும்பகோணம், திருச்சி, விருத்தாச்சலம், சிதம்பரம் மற்றும் பல்வேறு ஊர்களையும், அரியலூர், தஞ்சை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஜெயங்கொண்டம் மையப்பகுதியாக இருந்து வருகிறது.ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடலை, முந்திரி, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பிரதானமாக விவசாயம் செய்து வருகின்றனர். அத்தகு பெருமைமிகு ஜெயங்கொண்டம் நகராட்சி, நகராட்சி ஆவதற்கு முன்பாக, கடந்த 01.04.1889- முதல் ஊராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, 01.04.1945 - இரண்டாம் நிலை பேரூராட்சியாகவும், 01.04.1961- முதல் நிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது, 24.02.1982 - தேர்வு நிலை பேரூராட்சியாகவும், 18.06.2004 - தேர்வுநிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது கடந்த 09.06.2010- இரண்டாம் நிலை நகராட்சியாக உருவெடுத்தது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு 33945 ஆகவும், மொத்த வார்டுகளின் எண்ணிகை 21 ஆகவும், நகராட்சியின் மொத்த குடியிருப்பு எண்ணிக்கை 9842 ஆகவும், வார்டுகளின் சராசரி மக்கள் தொகை 1606 ஆகவும், வார்டுகளின் சராசரி குடியிருப்புகளின் எண்ணிக்கை 539 ஆகவும், ஒரு குடியிருப்பின் சராசரி மக்கள் தொகை 2.98 எனவும் இருந்தது.

2004 முதல் 2006 வரை தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்தபோது பூங்கோதை ராமாமிர்தமும், (தி.மு.க). 2006 முதல் 2011 வரை இரண்டாம் நிலை நகராட்சியாக இருந்த போது லதா கணேசனும், (தி.மு.க,) 2011 முதல் 2016 வரை நகராட்சி ஆன (3 ஆம் நிலை) மீனாள் சந்திரசேகரும், தி.மு.க. 2016 - 2021 - அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நடைபெறவில்லை.

தற்பொழுது தேர்தலுக்காகநகராட்சி மறுவரை செய்யப்படும் வார்டுகளின் எண்ணிக்கை வார்டு எண்.1 முதல் 21 வரையும் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு (பொது) 2 (வா.எண்.2,18), தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு (பெண்கள்) 2 (வா.எண்.9,10). பெண்களுக்கான இட ஒதுக்கீடு 9(வா.எண்.4,7,13,15,16,17,19,20,21). பொது பிரிவு 8 (வா.எண்.1,3,5,6,8,11,12,14),என வரையறை செய்யப்பட்டது.

இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 28001, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 13481, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 14520, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 38. ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 11. பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 11. அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் 16. வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியிட்ட நாள் 07.11.2021. வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நாள் 09.11.2021.வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் இடம் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளிவாக்குப்பதிவு நடைபெறும் இடம் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாள் 09.12.2021 மற்றும் 05.01.2022 தேர்தல் நடத்தும் அலுவலர் நகராட்சி ஆணையர் சுபாஷினியும், நகராட்சி தலைவர் பதவி - பொது(தாழ்த்தப்பட்டோர்).என ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும், முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் அனைத்தையும் தூர்வாரி தூய்மைப் படுத்துவதுடன் சாக்கடை நீர் கலக்காத வண்ணம் அணைகளை பலப்படுத்தி நீராதாரம் பாதுகாக்கப்பட வேண்டும், பஸ் நிலையம் அருகே உள்ள ஆவேரி ஏரியைச் சுற்றிலும் பூங்கா அமைக்க வேண்டும், பேரூராட்சியாக இருந்த காலத்தில் காலை எட்டு மணி மதியம் ஒரு மணி மாலை 5 மணி இரவு 9 மணி என சங்கு ஊதியது போல் மீண்டும் சங்கு ஒலி எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடை கடை வீதிகளில் உள்ள கடைகளுக்கு முன்பாக அவரவர் குப்பை போடுவதற்கான குப்பை பக்கெட் உங்களை கடைக்கு முன்பாக வைக்க அறிவுறுத்த வேண்டும்.

நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் குப்பையில்லா நகரமாக சுகாதாரமான சுற்றுப்புறசூழலை உருவாக்கி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும், ஜெயங்கொண்டம் 4ரோடு பகுதியில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் (குறிப்பாக பெண்கள்) பயன்படுத்தும் வகையில் பொதுக் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும், கடைவீதிக்கு கடைக்கு பொருட்கள் வாங்க வரும் இலகு ரக வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் நகரின் உள்ளே வராத வண்ணம் தற்போது இயங்கிவரும் மீன் மார்க்கெட் உள்ள கோடாப்பிள்ளை குட்டையில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சியாக இருப்பதால் திங்கள் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவதை நிறுத்தி காய்கறி,கனி வகைகள், இறைச்சி,மீன் கடைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் தினசரி சந்தையாக தரம் உயர்த்த வேண்டும், வாரச்சந்தை திடல் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் எனவே வாரச் சந்தை திடலில் சிமெண்ட் தளம் அமைத்து மேம்படுத்த வேண்டும். வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வார்டுகளில் உள்ள குடிநீர் சாலை வசதி மின்சார வசதி கழிப்பிட வசதி உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில் நேரில் சென்று பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜெயங்கொண்டத்தில் நூலக கட்டிடம் கட்ட செந்துறை ரோட்டில் இடம் தேர்வு செய்து பல மாதங்களாகியும் இதுவரை கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் கட்டிடம் கட்டி நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் தங்கள் வார்டுகளில் உள்ள இளையதலைமுறைகளை மது கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகாமல் இருக்க நூலகத்திற்கு செல்ல பெற்றோர்களிடம் அறிவுறுத்த வேண்டும், ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் ரோட்டில் உள்ள காந்தி பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும், ஜெயங்கொண்டம் கழுகுமலை நாதர் கோயில் அருகே பஸ் நிலையம் ரோட்டில் ஓரமாக உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும், ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் உயர்மட்ட கோபுர விளக்கு அமைக்க வேண்டும், போக்குவரத்து சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கனரக இலகுரக சரக்கு வாடகை வாகனங்கள் நகர பகுதிகளை விட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாவண்ணம் இருக்க நகர எல்லை பகுதியில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பஸ் நிலையங்களுக்கு உள்ளே வாடகை வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது,

பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலையில் ஓரமாக பஸ்கள் நிறுத்தி இருப்பதை தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்லும் வகையில் வழி விட்டு நிறுத்த வேண்டும், நகராட்சி மூலம் கடைவீதியில் அதிகாலை நேரத்தில் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும், காலையில் தினமும் திறந்தவெளி சாக்கடைகளில் பேரூராட்சியாக இருந்த காலத்தில் தெளித்தது போல் கொசுமருந்து பிளீச்சிங் பவுடரும் போட்டு தூய்மை காக்க வேண்டும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்க தொட்டிகளிலும் மாதம் ஒருமுறை தூய்மைப்படுத்தி பிளீச்சிங் பவுடர் போட வேண்டும், பாதுகாப்பற்ற முறையில் உள்ள நீர் தேக்க தொட்டிகளை அகற்றிவிட்டு புதிதாக நீர்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும், நகரப் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் தட்டுப்பாடு இல்லாத குடிநீர் வழங்க வேண்டும் மேலும் குடிநீர் இணைப்புக் குழாய்களில் சாக்கடை கலக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும், தற்போது கொக்கனேரியை தூர்வாரி தூய்மைப்படுத்தி பூங்கா அமைக்க பூமி பூஜை போட்டும், பணி நடைபெற எந்த முகாந்திரமும் இல்லாமல் உள்ளது.எனவே அதனை போர்க்கால அடிப்படையில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் குடிக்கும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுத்து சிறந்த நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், நகராட்சிக்கு பல்வேறு அலுவல் காரணமாக வரும் பொதுமக்களை காக்க வைக்காமலும், அலைக்கழிப்பு செய்யாமலும், அலட்சியப்படுத்தாமலும் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகவும், இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!