'ஓட்டு போட வாங்க' வெத்தலை,பாக்கு வச்சி அழைப்பு
' எல்லாம் வெத்தலை பாக்கு வச்சி அழைக்கணுமா ' என்று கிண்டலாக கூறுவது வழக்கம். அதை உறுதி படுத்தும் விதமாக 'ஓட்டு போட வாங்க' என்று வெத்திலை பாக்கு வைத்து பொதுமக்களை அழைத்த சுவையான சம்பவம் நடந்துள்ளது.
திருமண நிகழ்விற்கு அழைப்பதுபோல் தட்டில் வெற்றிலை,பாக்கு அழைப்பிதழ் வைத்து அனைவரையும் வாக்களிக்க வருமாறு வீடுவீடாக சென்று பொதுமக்களை ஜெயங்கொண்டம் நகராட்சி அழைத்த நிகழ்வு பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் 'வாக்களிக்கும் வைபோகம்' என்ற தலைப்பில் வீடு வீடாகச் சென்று வெத்திலை,பாக்கு அழைப்பிதழ் வழங்கி அனைவரும் வாக்களிக்க வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். திருமண பத்திரிக்கைபோல் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழை வைத்து குடும்பத்தினரை வெளியில் அழைத்து அழைப்பிதழை வழங்கி வாக்களிக்க தவறாமல் வருமாறு அழைத்தனர். அப்போது பொது மக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் 100% வாக்களிக்க வலியுறுத்தியும், பணம் வாங்காமல் வாக்களிக்க அறிவுறுத்தியும் கோரிக்கை வைத்தனர்.
கொரோனா விழிப்புணர்வுடன் வந்து ஓட்டு போடுவதையும் வலியுறுத்தினர்.நேரில் சென்று அழைக்கும் நகராட்சி ஊழியர்கள் தமிழர் பண்பாட்டையும். பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் அனைவரும் வேஷ்டி, சட்டை அணிந்து செல்கின்றனர்.
நகராட்சி ஆணையர் பொறுப்பு சிவராமகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அலுவலக பணியாளர்கள் ஈடுபட்ட இந்த நூதன பிரச்சாரம் பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu