ஆண்டிமடம் அருகே கணவனை கொன்று புதைத்த மனைவி 11 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஆண்டிமடம் அருகே கணவனை கொன்று புதைத்த மனைவியை 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள ஜெமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு லட்சுமி(44),குணசேகரன்(42) என 2 பிள்ளைகள். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2007ம் ஆண்டு அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் குணசேகரன் மற்றும் அவரது உறவினர் சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியில் வந்தனர்.

இதனிடையே, அந்த கொலை வழக்கின் தீர்ப்பு 2011ம் ஆண்டு வழங்கப்பட்டபோது சங்கர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். குணசேகரன் ஆஜராகவில்லை. இதுகுறித்து, குணசேகரன் அக்காள் லட்சுமி, குணசேகரன் மனைவி ஜெயந்தியிடம் கேட்டபோது, போலீஸ் மற்றும் தீர்ப்புக்கு பயந்து கேரளாவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நிகழ்ந்து 11 ஆண்டுகள் ஆகியும் குணசேகரன் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த லட்சுமி கடந்த 5 ம் தேதி ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஜெயந்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குணசேகரன் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், ஆத்திரமடைந்து கீழே தள்ளியதில் தலையில் அடிப்பட்டு இறந்து விட்டதாகவும், இதையடுத்து தனது தந்தை மகாராஜன்(75), அக்காள் ஜோதி(40) ஆகியோருடன் சேர்ந்து கடந்த 2010ம் ஆண்டு உடலை புதைத்து விட்டதாகவும், பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு புதைத்த இடத்தில் இருந்த எலும்புகளை எடுத்து எரித்துவிட்டதாகவும் போலீசாரிடம் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, கொலை செய்த ஜெயந்தி, உடந்தையாக செயல்பட்ட அவரது அப்பா மகாராஜன், அக்காள் ஜோதி ஆகியோரை ஆண்டிமடம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவனை கொன்று புதைத்து விட்டு 11 ஆண்டுகளாக கணவன் கேரளாவில் இருப்பது போல் நடித்து வந்துள்ள ஜெயந்தியை நினைத்து அக்கம் பக்கத்தினர் வியந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!