ஜெயங்கொண்டத்தில் நிலத்தை விவசாயிகளுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கை: பா.ம.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஜெயங்கொண்டத்தில் நிலத்தை விவசாயிகளுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கை: பா.ம.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

ஜெயங்கொண்டத்தில் கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கு ஒப்படைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, பா.ம.க.,வினர் வெடிவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


ஜெயங்கொண்டத்தில் கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை வரவேற்று, பா.ம.க.,வினர் இனிப்பு வழங்கினர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள ௧௩ கிராமங்களில் நிலக்கரி தாது அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஜெயங்கொண்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் பழுப்பு நிலக்கரி அனல்மின் திட்டத்தை தொடங்க திட்டமிட்டது.

அதற்கான நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டதையடுத்து தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தொடங்கியது. 13 கிராமங்களில் பொது நோக்கத்திற்காக நிறுவுதல் சட்டவிதிகளின்படி டிட்கோவுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த லிக்னைட் சுரங்க மின் உற்பத்தித் திட்டம் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தின்படி 13 கிராமங்களில் 3390 ஹெக்டேர் (8373 ஏக்கர்) நிலம் கையகப்படுத்தப்பட்டது. தலா ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.35ஆயிரம் இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவில் சுமார் 3500 பட்டாதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை போதுமானது அல்ல என்று கூறி வழக்கு சுமார் 10,000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்குகளை விசாரிப்பதற்காக ஜெயங்கொண்டத்தில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கியது. இந்த நீதிமன்றங்கள் மூலம் வழக்குகள் தீர்த்து வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த இரண்டு சிறப்பு நீதிமன்றங்களில் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு சராசரியாக 15 லட்சம் ரூபாய் இழப்பீடு, அதாவது 43 மடங்கு தொகை நிலம் கையகப்படுத்தும் அதிகாரியால் வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பழுப்பு நிலக்கரி அனல்மின் திட்ட சிறப்பு தாசில்தார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் உயர்நிலைக் குழுவை அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது, நிலங்களை கையகப்படுத்தக்கூடிய நோக்கங்களை மறுபரிசீலனை செய்ய பகுப்பாய்வு செய்வதற்கான குழு மற்றும் விவசாயிகள் ஆகியோர் இணைந்து லோக் அதாலத் மூலம் நிவாரணம் பெற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, மூத்த அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவை தமிழக அரசு அமைத்தது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பயன்பாடு குறித்த அடுத்த நடவடிக்கை தொடர்பாக உயர்மட்டக் குழு கூட்டம் 16.08.2017 ல் நடைபெற்றது. முதலில் லோக் அதாலத் மூலம் வழக்குகளை தீர்க்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.மேலும் வழக்குகளை தீர்ப்பதற்கு லோக் அதாலத்தை அணுக அரசும் ஒப்புக்கொண்டது. மேற்கண்ட நிலங்களின் மதிப்பீட்டை நில ஆணையருடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

லோக் அதாலத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீடுகள் உட்பட வழக்குகள் லோக் அதாலத் முன்பு, நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த துணை குழுவை அமைக்கவும், நடைமுறையில் உள்ள வழிகாட்டி மதிப்பின் இரண்டு மடங்கு உச்ச வரம்புடன் நில மதிப்பு நிர்ணயம் செய்யவும் உபகுழு கலந்துரையாடியது.

31.08.2019 ல் கூவத்தூர் மற்றும் காட்டத்தூர் கிராமங்களின் நில உரிமையாளர்களிடம் நடத்தப்பட்ட கூட்டத்தின் விபரம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் 9.10.2019 முன்மொழிவுகளை நில ஆணையரிடம் சமர்ப்பித்தார். இதன்பின்னர் டிட்கோ நிறுவனம் பழுப்பு நிலக்கரி அனல்மின் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகையை வழங்கினால் திட்டத்தை செயல்படுத்து சத்தியக்கூறுகள் இல்லை எனவும், அரசு வழங்கிய தொகையை விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு மீண்டும் விவசாயிகளிடம் நிலங்களை ஒப்படைக்க ஆட்சியர் மூலம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து, பேச்சுவார்த்தையில் தங்களுக்கு வழங்கப்பட்ட சொற்பத்தொகையை அரசு மீண்டும் பெற்றுக்கொள்ளாமல் நிலத்தை மீண்டும் தங்களுக்கே ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். ஒருசிலரே தங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்ப வழங்குவதாக கூறினர்.

இதைத்தொடர்ந்து, தொழிலாளர் துறை கடந்த 2ம்தேதி பிறப்பித்த உத்தரவில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்ப செலுத்த வேண்டியது இல்லை. நிலத்தை வழங்கிய விவசாயிகள் தமிழக அரசிடம் இருந்தும், டிட்கோ நிறுவனத்திடம் இருந்தும் எவ்வித இழப்பீடும் கோரமாட்டோம் என்ற உறுதிமொழியுடன், தங்களுடைய நிலத்தை மீண்டும் தங்களுக்கு ஒப்படைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் நிலம் திரும்ப ஒப்படைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலம் பெறப்பட்ட நபர்களுக்கு அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நிலம் ஒப்படைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலம் ஆவணங்கள் தெளிவாக்கப்பட வேண்டும். நிலம் முறையாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதையும், அந்த நிலம் அசல் உரிமையாளர்களிடம் இருந்து காகித உடைமை மட்டுமே எடுக்கப்பட்டது என்றும் உண்மையான நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், இது தொடர்பான அறிக்கையை அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.நிதித்துறையின் ஒப்புதலுடன் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் மேற்கண்ட நடவடிக்கைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் ஜெயங்கொண்டம் பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியபடி எவ்வித இழப்பீட்டையும் பெற்றுக்கொள்ளாமல் நிலங்களை தங்களுக்கு மீண்டும் ஒப்படைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயங்கொண்டம் நகரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நிலம் மீண்டும் விவசாயிகளுக்கு ஒப்படைக்கும் அரசின் நடவடிக்கை தங்கள் கட்சியின் தொடர் நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று கூறி வெடிவெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Tags

Next Story