கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கு அன்னகாப்பு

விழாவின் முக்கிய நிகழ்வான அன்னக்காப்பு 60 கிலோ அரிசி சாதம் வடித்து அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் உலகப்பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இதில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரியது. 13½அடி உயரமும்,62அடி சுற்றளவும் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய லிங்கமாகும். மேலும் இது யுனெஸ்கோவின் புராதான சின்னமாகவும் உள்ளது.

இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நூறு மூட்டை அரிசி சாதம் வடித்து 2500 கிலோ அன்னத்தை லிங்கத்திற்கு அன்னாபிஷேக திருவிழா போன்று கொண்டாடுவர்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக 2 மூட்டை அரிசி சாதம் கொண்டு சுவாமிக்கு சாதாரண அன்னக்காப்பு விழாவாக மட்டும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்று காலை கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பிரகதீஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர்,சந்தனம், தேன், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான அன்னக்காப்பு 60 கிலோ அரிசி சாதம் வடித்து அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. கடந்தாண்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சி சங்கர மட பக்தர்கள் கங்கை கொண்ட சோழபுரம் வழிபாட்டு குழுமம் ஆகியோர் இணைந்து செய்தனர். அரியலூர், புதுச்சேரி, தஞ்சை, நாகை சென்னை, கடலூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story