தண்ணீரை சந்தை பொருளாக மாற்றிவிட்டார்கள் : சீமான் குமுறல்
விவசாயி மகனுக்கு விவசாயி வாக்களிக்காவிட்டால் வெளிநாட்டில் இருந்து யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று சீமான் கூறினார்.
அரியலூர் சட்டமன்றதொகுதி வேட்பாளர் சுகுணா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றதொகுதி வேட்பாளர் மகாலிங்கம் இருவரையும் ஆதரித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களித்து விட்டீர்கள். இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். ஊழலை ஒழிக்க வேண்டும். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதாது. இரண்டையும் ஒழிக்க வேண்டுமென்றால் ஆண்ட இரு கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
ஆயிரம், 500 வாங்கிக்கொண்டு ஓட்டை விற்கிறோம். அவர்கள் ஓட்டை வாங்கி கொண்டு நாட்டை விற்கிறார்கள். இது தான் இங்கு தொடர்ச்சியாக நடைபெறுகிறது. மாநிலத்தில் எந்த உரிமையும் இல்லை. கல்வி இல்லை, மருத்துவம் இல்லை, தண்ணீரை மிகப்பெரிய சந்தை பொருளாக மாற்றி உள்ளனர். உலகிலேயே அதிகமாக நீரை உறிஞ்சும் நாடு இந்தியா. இந்தியாவில் அதிகமாக உறிஞ்சும் மாநிலம் தமிழ்நாடு. இந்த ஆட்சியில் விவசாயிகள் மண்ணில் வாழவே முடியாது.
இந்த இரண்டு கட்சி ஆட்சிகளையும் ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது. 10 கோடி ரூபாய் செலவு செய்கிறவன் 100 கோடியாக பெற்று கொள்ளலாம். 500கோடியாக பெருக்கி கொள்ளலாம். அதற்கு பாதுகாப்பான இடம் இந்த அரசியல். இந்த தேர்தல் களம், இந்த பதவி என அவர்கள் நினைத்து கொண்டு உள்ளனர்.
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு இலையில் மட்டுமே பச்சை உள்ளது நாடு வரண்டு உள்ளது. உதய சூரியனுக்கு ஓட்டு போட்டு சின்னம் மட்டும் சூரியனாக உள்ளது. எண்ணமும், நாடும் இருட்டில் உள்ளது.
விவசாயி சின்னத்திற்கு வெளிநாட்டில் இருந்து யாரும் வாக்களிக்க மாட்டார்கள். விவசாயியான நீங்களே வாக்களிக்கா விட்டால் வேறு யார் வாக்களிப்பார்கள். அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள். தற்போது தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டு சோமாலியா நாடு போன்ற கடும் தண்ணீர் பஞ்சம் எதிர்காலத்தில் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை மாற்ற வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும்.
விவசாயி உற்பத்தி செய்த வேளாண் பொருளுக்கு விவசாயிதான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், இங்கு நிலை அப்படி அல்ல? இதை மாற்ற வேண்டும். விவசாயி உற்பத்தி செய்த பொருளுக்கு விவசாயியே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார். திரளான நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu