20அடி ஆழ கிணற்றில் டிராக்டருடன் விழுந்த டிரைவர் பத்திரமாக மீட்பு

20அடி ஆழ கிணற்றில் டிராக்டருடன் விழுந்த டிரைவர் பத்திரமாக மீட்பு
X

கிணற்றில் விழுந்த டிராக்டர்.

அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் பகுதியில், டிராக்டருடன் கிணற்றில் விழுந்த டிரைவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் தெற்கு காலனியில் மணி என்பவருக்கு விவசாய நிலத்தில், கிணறு ஒன்று உள்ளது. கடலை விதைப்பு செய்வதற்காக டிராக்டர் மூலம் நிலத்தில் உழவு செய்ய, மணி முடிவு செய்தார். அதன்படி, இலையூர் கருப்பனார் கோவில் தெருவை சேர்ந்த தட்சணாமூர்த்தி (55) என்பவர், டிராக்டரில் உழவு ஓட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது, பாதுகாப்பு கரையின்றி தரைதளத்தில் புல்மண்டி இருந்த 20அடி கிணற்றில், டிராக்டருடன் தவறி விழுந்துள்ளார். இதில் டிரைவர் தட்சணாமூர்த்தி வண்டியின் அடியில் சிக்கிக் கொண்டார். அருகில் இருந்த மணியின் மனைவி சத்தம்போட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார். மேலும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்புத்துறை அலுவலர்கள், கிணற்றில் தவறி விழுந்த தட்சணாமூர்த்தியை கிரேன் மூலம் லேசான காயத்துடன் வெளியில் மீட்டனர். பின்னர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டிராக்டரை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!