அரண்மனை சுவர், செங்கற்களான நீர்போக்கி வாய்க்கால் கண்டுபிடிப்பு
கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமை இடமாக கொண்டு ராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வாழ்ந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. சோழமன்னர் ராஜேந்திரசோழன் தனது தலைநகரில் கட்டப்பட்ட பிகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கி வருகிறது. ஆனால் 250 ஆண்டுகளுக்குமேல் தென்ஆசியாவின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை பகுதி மண்ணோடு மண்ணாகி மறைந்து விட்டது.
கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகை மேட்டில் உள்ள அரண்மனையின் அடித்தளம் முதல்கட்ட அகல்வாராய்ச்சியில் கிடைத்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் முதலில் கூரை ஓடுகள், இரும்பிலான ஆணிகள், சீன வளையல்கள், செப்பு காசுகள் உள்ளிட்டவைகள் கிடைக்கப்பெற்றது. மேலும் சிறுசிறு சுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்று சுமார் 5அடி உயரமுள்ள ஒரு மீட்டர் அகலம் உள்ள பிரம்மாண்டமான சுவரும், சுமார் 5அடி நீளமுடைய செங்கற்களால் ஆன நீர்ப்போக்கி வாய்க்காலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கூரை ஓடுகள் உடைந்து சிறு சிறு ஓடுகளாக பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. மேலும் அகழ்வாராய்ச்சி பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொடரும் அகழ்வாராய்ச்சியில் பலப்புதிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என்றும், பல வரலாற்று பொருள்கள் கண்டெடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிஞர்கள் கூறி வந்த நிலையில் இன்று கிடைக்கப்பட்ட பெரிய மதில்சுவர் மற்றும் நீர்ப்போக்கி வாய்க்கால் ஆகியவை மன்னர்களில் வாழ்க்கை முறையை அறிய உதவும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu