ஜெயங்கொண்டம் : கொரோனா சிகிச்கை மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் 42 படுக்கை வசதிகளுடன் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்கை மையத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி, 200 நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் தகுதியான அனைவருக்கும் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஜெயங்கொண்டம் அரசு தலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க 42 படுக்கை வசதிகளுடன் புதிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 30 படுக்கை வசதிகள் ஆக்சிஜன் வசதியுடனும், 12 சாதாரண படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, கொரோனா நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
மகப்பேறு சிகிச்சை மையம் புதியதாக ரூ.18 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், மின்வசதி உள்ளிட்டவைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு தேவையான மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான இருப்பு வைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் வசதிகளுக்காக தேவையான அளவு ஆக்சிஜன் அளவு இருப்பு இருப்பதை உறுதிசெய்யப்பட்டு, ஆக்சிஜன் செறிவூட்டிகளும் நோயாளிகளின் சிகிச்சைகளுக்காக வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
கொரோனா நோய் தொற்று அறிகுறி தென்படும் நபர்கள் அனைவரும் முறையான பரிசோதனை மேற்கொண்டு, தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் மருத்துவமனைகளுக்கு சென்று பொதுமக்கள் அனைவரும் சிகிச்சை பெற வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளான முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட செயல்களை தொடர்ந்து கடைபிடித்து வருவதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாத்துக்கொள்ளலாம். தமிழக அரசு இலவச தடுப்பூசி முகாம்களை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இம்முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை திறந்து வைத்து, 200 நகராட்சி பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகைப்பொருட்களின் தொகுப்பு மற்றும் கபசூரண குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
இந்நிகழ்ச்சியில், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மரு.உஷா, வட்டாட்சியர் ஆனந்த் (ஜெயங்கொண்டம்), பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu