/* */

விதிமுறைகளை கடைபிடிக்காத 12கடைகளுக்கு 11ஆயிரம் அபராதம்!

ஜெயங்கொண்டத்தில், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 12 கடைகளுக்கு, நகராட்சி ஆணையர் 11,000 ஆயிரம் அபராதம் விதித்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முககவசம் அணிந்து பொதுமக்கள் வெளியே வருகின்றனரா, தமிழக அரசு கூறும் விதிமுறைகளை கடைக்காரர்கள் கடைப்பிடிக்கின்றனரா, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகளை வியாபாரிகள் கடைகளில் வைத்து விற்பனை செய்கின்றரா, என திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஜெயங்கொண்டம் 4ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரோடு, தா.பழூர் ரோடு, விருத்தாச்சலம் ரோடு, சிதம்பரம் ரோடு, உள்ளிட்ட டீக்கடை, பெட்டிக்கடை, மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்துடன் கடைக்காரரிடம் இது போன்ற பொருள்களை விற்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து விற்பனை செய்யும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அவ்வழியே வந்த பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பஸ் ஒட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பற்றியும், அது தற்போது பரவி வரும் வேகம் பற்றியும் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்.

ஜெயங்கொண்டம் 4 ரோடு வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில், ஓட்டுனர் முகக்கவசம் அணியாததை பார்த்த நகராட்சி ஆணையர், விரைந்து சென்று பஸ்ஸில் ஏறி ஓட்டுனரிடம் முககவசம் அணியச்செய்து அறிவுரை வழங்கியதுடன் பயணிகளுக்கும் முகக்கவசம் அணிய செய்ய அறிவுறுத்த வேண்டும், கைகளுக்கு கிருமிநாசினி வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

முககவசம் அணியாதவர்களுக்கு நகராட்சி மூலம் முககவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட கடைவீதிகளில் உள்ள மளிகை கடை, டீக்கடை ஹோட்டல்கள் உள்ளிட்ட 12 கடைகளுக்கும் தலா 500 ரூ முதல் 1,000 ரூபாய் என 11,000 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Updated On: 28 April 2021 6:15 AM GMT

Related News