உக்ரைனிலிருந்து வீடு திரும்பிய கல்லூரி மாணவி: குடும்பத்தினர் மகிழ்ச்சி
உக்ரைனிலிருந்து வீடு திரும்பிய அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்தனாவுக்கு ஆரத்தி எடுக்கும் குடும்பத்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரில் வசிப்பவர் செல்வம். விவசாயியான இவரது மகள் கீர்த்தனா(19). இவர் உக்ரைன் நாட்டில் ரூத்ரர் நேஷனல் யூனிவர்சிட்டியில் மருத்துவம் படிக்க கடந்த நவம்பர் மாதம் சென்றார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தீவிரமாக நடைபெற்று வருவதையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு தங்கி பயிலும் இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
இதனிடையே, உக்ரைனுக்கு சென்ற தங்களது மகள் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று காத்திருந்த செல்வத்தின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கீர்த்தனா இன்று காலை பத்திரமாக வீடு திரும்பினார். அவரை குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து கட்டித்தழுவி மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி கீர்த்தனா, நாங்கள் இருந்த பகுதியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு போர் பதற்றம் தெரியவில்லை. ஆனாலும், பாதுகாப்பு கருதி புதாபெஸ்ட் விமான நிலையத்திலிருந்து டெல்லி வந்து, அங்கிருந்து சென்னை வந்து வீடு திரும்பியுள்ளேன்.
என்னுடன் தென்காசி, கோவை, திருநெல்வேலி பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளும் வந்தனர். எங்களை பதற்றம் ஏற்படும் முன்பே மத்திய, மாநில அரசுகள் தாயகம் அழைத்து வந்தமைக்கு தனது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu