அரியலூர்-ஆம்புலன்சை தடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியல்

அரியலூர்-ஆம்புலன்சை தடுத்து  மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியல்
X

ஜெயங்ககொண்டம் அருகே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆம்புலன்சை தடுத்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்

அரியலூர் மாவட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு தொழிலாளர்கள் ஆம்புலன்சை தடுத்து சாலை மறியல் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மணல் மாட்டு வண்டி தொழிலாளி. கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு என தனியாக மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி, கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பாஸ்கரின் உடல் அவரது சொந்த கிராமமான உதயநத்தத்திற்கு எடுத்து வரப்பட்டது. அப்போது மாட்டுவண்டி தொழிலாளர்கள், தா.பழூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிய வந்ததையடுத்து, போலீசார் மாற்றுப்பாதை அணைக்கரை வழியாக உடலை கொண்டு வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் அணைக்கரை கண்டியங்கெல்லை பிரிவு பாலத்துக்கு அருகே, உடலை ஏற்றிவந்த ஆம்புலன்சை இடையில் வழிமறித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இறந்து போன பாஸ்கர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். பாஸ்கர் குடும்பத்தில் ஊனமுற்ற அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாஸ்கரின் 2 குழந்தைகளது படிப்பு செலவை அரசே ஏற்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர், கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!