ஜெயங்கொண்டம் அருகே அரசு பேருந்து- ஆட்டோ- லாரி மோதலில் 21 பேர் காயம்

ஜெயங்கொண்டம் அருகே அரசு பேருந்து- ஆட்டோ- லாரி மோதலில் 21 பேர் காயம்
X
ஆட்டோ குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய லாரி ஆட்டோ மற்றும் பேருந்து மீது மோதியதில் 2ஓட்டுநர்கள் உட்பட 21 பேர் காயமடைந்தனர்.

பெரம்பலூரிலிருந்து அரியலூர் வழியாக ஜெயங்கொண்டம் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கச்சிபெருமாள் கிராமத்தை கடக்க முயன்ற போது, நெய்வேலியிலிருந்து அரியலூருக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரி, அப்போது குறுக்கிட்ட பயணிகள் ஆட்டோவில் மோதியது. மேலும், திடீரென குறுக்கே வந்ததால், நிலைதடுமாறிய லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்த முயற்சித்தும் முடியாமல் ஆட்டோவுடன் சேர்த்து எதிரே வந்த பேருந்து மீது மோதி நின்றது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் அங்கராயநல்லூர் ஆனந்தன்(40), பேருந்து ஓட்டுநர் கீழகுடியிருப்பு ராயர்(50), நடத்துனர் உதயகுமார்(43), பேருந்தில் பயணம் செய்த ஸ்ரீ்புரந்தான் தனபால்(59), ஜெயங்கொண்டம் கவிதா(41), அழகாபுரம் அருள்மேரி(49), உதயநத்தம் சண்முகம் (36) உட்பட 21 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன், பேருந்து ஓட்டுநர் ராயர் உட்பட5 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!