அரியலூர்: புராதன சின்னமான 60 அடி உயர யானைசிலை பராமரிப்பு பணி தொடக்கம்

அரியலூர்: புராதன சின்னமான 60 அடி உயர யானைசிலை பராமரிப்பு பணி தொடக்கம்
X

அழகர் கோயில் கிராமத்தில் அமைந்துள்ள புராதான சின்னமான 60 அடி உயர யானைசிலை பராமரிப்பு பணி தொல்லியல் துறை சார்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இந்த யானை சிலை வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்பு கலவை மற்றும் சுட்ட சிறிய செங்கற்களால் உருவாக்கப்பட்ட சிற்பமாகும்.

அரியலூர் மாவட்டம், அழகர் கோயில் கிராமத்தில் அமைந்துள்ள புராதன சின்னமான 60 அடி உயர யானை உருவ சிலை பராமரிப்பு பணி தொல்லியல் துறை சார்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்த சலுப்பை கிராமத்தில் உள்ள அழகர் கோயிலின் யானைசிலை, தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாகும். அழகர் கோயிலில், ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில், சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து, அதில் வெற்றி பெற்றதன் நினைவாக, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இக்கோயிலுக்கு, எதிரே 60 அடி உயரம், 33 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட மிகப்பிரம்மாண்டமான யானைஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த யானை உருவசிலை வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்பு உள்ளிட்ட கலவை மற்றும் சுட்ட சிறியசெங்கற்கள் மூலம் உருவாக்கப்பட்ட சுதை சிற்பமாகும்.

யானைசிலையின் கழுத்து மற்றும் உடலின் இரு புறங்களிலும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. மேலும், யானையின் இருபுறமும் தலா மூன்று கலைஞர்கள் பண்டைகால வாத்தியங்களை இசைப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் யானை தும்பிக்கையில் திருடனை பிடித்து வைத்துள்ளது போன்று தத்ரூபமாக வடிமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிலையை காண்பதற்கு வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருகை புரிகின்றனர். ஆனால் போதிய பாதுகாப்பு இன்றியும், சிலைகளில் பாசி படிந்து கருப்பு நிற கறைகள் உள்ளதால், யானை உருவ சிலைக்கு பாதுகாப்பு சுற்றுசுவர் அமைத்து அதை யானை உருவ சிலையை தொன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்பேரில் தற்பொழுது சென்னை தொல்லியல்துறை சார்பில் யானையின் மேற்பரப்பில் படிந்துள்ள கருப்பு நிற கறைகளை அகற்றி பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது. சிலையின் தொன்மை மாறாமல் சிலையை சுத்தப்படுத்தவும், அதே நிறத்தை மீண்டும் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது அப்பகுதி மக்கள் மற்றும் வரலாற்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!