அரியலூர்: சூறைகாற்று, மழைக்கு முந்திரி மரங்கள் சேதம்- விவசாயிகள் வேதனை

அரியலூர்: சூறைகாற்று, மழைக்கு முந்திரி மரங்கள் சேதம்- விவசாயிகள் வேதனை
X

சூறைக்காற்று, மழையால் முறிந்து விழுந்துள்ள முந்திரி மரங்களை காணலாம்.

அரியலூரில் சூறைக்காற்று, கனமழையால் சேதமடைத் முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அகரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் முந்திரி சாகுபடியை, பிரதான பயிராக செய்து வருகின்றனர். இங்கு உள்ள விவசாயிகள் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் காலம் காலமாக முந்திரி சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அகரம் கிராமத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த சூறாவளி காற்று மற்றும் கனமழை காரணமாக முந்திரி சாகுபடி செய்யப்பட்டிருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தது. மரங்கள் முற்றிலும் முறிந்து கீழே சாய்ந்த நிலையில் இருந்ததை பார்த்த விவசாயிகள் மிகவும் மனவேதனை அடைந்தனர். இதனால் செய்வதறியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சுமார் 250 ஏக்கர் நிலப் பரப்பளவில் உள்ள 75 - க்கும் மேற்பட்ட விவசாயிகளுடைய முந்திரி, மா, பலா, வேம்பு உள்ளிட்ட மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சேதம் அடைந்தது. இதில் ஒவ்வொரு மரமும் 40 முதல் 80 வருடங்கள் பழமை வாய்ந்த மரங்கள் ஆகும்.

ஏக்கர் 1-க்கு 1 பட்டத்திற்கு 10 மூட்டை வரை முந்திரி காய்க்கும், இதனால் ஒரு வருடத்திற்கு 2 முதல் 3 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மரங்கள் முறிந்த இடத்தில் புதிதாக ஒட்டுரக முந்திரி மரங்களை வைத்தால் கூட அது மரமாக வளர ஐந்து வருடங்கள் ஆகும்.இந்த ஐந்து வருடங்கள் கழித்துதான் முன்பிருந்த மகசூலை பார்க்க முடியும். தற்போது ஏற்ப்பட்டுள்ள இழப்பு விவசாயிகளுக்கு 5 வருடத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருடத்திற்கு 3 லட்சம் என்றால் கூட ஐந்து வருடங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 லட்சம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் முந்திரி சாகுபடியை மட்டுமே நம்பி உள்ளது. இந்த சூழ்நிலையில் இப்பகுதி விவசாயிகளுக்கு வேறு எந்த விவசாயமும் செயவதற்கு இல்லை.

எனவே விவசாயிகளின் நிலங்களை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க ஆவணம் செய்ய வேண்டுமென விவசாயிகள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!