அரியலூர்: மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர்: மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் வாயக்கால்கள் தூர்வாரும் பணிகளை  கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் கால்வாய், மழைநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணிகள் 20.09.2021 முதல் 25.09.2021 வரை அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிமடம், அழகாபுரம் ஊராட்சி அகரம் கிராமத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களிலுள்ள செடி, கொடிகளை அகற்றுவதுடன் அதில் படிந்துள்ள மண் படிவங்களையும் அகற்றி கிருமி நாசினி தெளிக்க வேண்டும், மேலும், குளம், குட்டை உள்ளிட்டவைகளுக்கு செல்லும் பெரிய வாய்க்கால்களை இயந்திரங்களை கொண்டும், மற்ற வாய்க்கால்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டப் பணியாளர்களை கொண்டும் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், எவ்வித தொய்வுமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஜெயங்கொண்டம் ஊராட்சிக்குட்பட்ட இடையார் மற்றும் வாணதிரையான் பட்டிணம் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் அமர்நாத், வட்டாட்சியர்கள் ஆனந்தன் (ஜெயங்கொண்டம்), முத்துகிருஷ்ணன் (ஆண்டிமடம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், சிவாஜி, பிரபாகரன், வரதராஜன்பேட்டை செயல் அலுவலர் உஷா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!