புராதன சின்ன பாதுகாப்பு சட்டத்தை மீறி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் அருகே இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கட்டிடங்கள் இருக்கும் இடங்களில் சுமார் 100 மீட்டருக்கு உள்ளாக கட்டிடங்கள், சுரங்கப் பணிகள், சாலை பணிகள் உள்ளிட்டவைகள் மேற்கொள்ள கூடாது. பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொள்ள இந்திய தொல்லியல் துறை, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என விதிகள் உள்ளன.
இந்நிலையில், கங்கை கொண்ட சோழபுரத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் பிரகதீஸ்வரர் ஆலயத்திலிருந்து 100 மீட்டருக்குள் ஓய்வு இல்லம் (கெஸ்ட் ஹவுஸ்) கட்டி வந்தார். கட்டிடம் கட்ட எவ்வித அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே அதேஊரை சேர்ந்த செந்தில் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்படுவதை உறுதி செய்ததையடுத்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.
அதில் இரு வார காலத்திற்குள் கட்டிடம் தரைமட்டமாக அகற்றப்பட வேண்டுமெனவும், அவ்வாறு அகற்றப் படாவிட்டால் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கட்டிடம் இடிப்பதற்கான காலக்கெடு முடியும் தருவாயில் இருந்த நிலையில், நேற்று இரவு ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில், அந்த கட்டிடம் இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்றது.
அப்போது உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், வட்டாட்சியர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இடிக்கப்பட்ட கட்டிடத்தின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu