அரியலூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
அரியலூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்சில் ஏற்றுவதற்காக எடுத்து செல்லப்பட்டது.
உலகம் முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சுமார் ஒரு மாத காலமே உள்ள நிலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் சிவகாசி மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. இப்படி பட்டாசு தயாரிக்கும்போது அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர்ப்பலிகள் ஏற்படுவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.
கடந்த வாரம் மயிலாடு துறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் ஒரு பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். நேற்று முன்தினம் தமிழகம் கர்நாடக மாநில எல்லையான ஓசூர் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் ஒரு பட்டாசு விபத்து ஏற்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்பட்டாசு கடை உள்ளது. தீபாவளி பண்டிகை விற்பனைக்காக இங்கு பட்டாசு தயாரிக்கும் பணியும் நடைபெற்று வந்தது. இன்று காலை பட்டாசு தயாரிப்புப் பணிக்காக வழக்கம்போல் பணியாளர்கள் வந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெட்டித்து சிதறத் தொடங்கின.
இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் சிதைந்து கிடப்பதால், அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். படுகாயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை செய்துவருகிறார்கள். தீ விபத்து ஏற்பட்டது என்பது பற்றி போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu