கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் 250 ஏக்கர் நெல் வயல்கள் மூழ்கியது
கொள்ளிடத்தில் 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 250 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரி நீர் திருச்சி முக்கொம்பிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கரை கீழ் அணையில் இருந்து 60 மதகுகள் வழியாக 1.56 லட்சம் கன அடி தண்ணீர் கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் சுமார் 35 கிலோமீட்டர் பாய்ந்து செல்லக்கூடிய கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தழும்பிய படி கொள்ளிடம் கரைபுரண்டு சீறிப்பாய்ந்து செல்கிறது. மேலும் கொள்ளிடத்தில் வரக்கூடிய இரண்டு லட்சம் கன அடி நீரும் அணைக்கரையிலிருந்து முழுவதுமாக திறக்கப்பட்டு கடலுக்குச் செல்கிறது. இரண்டு கரைகளையும் தழும்பியபடி கொள்ளிடத்தில் தண்ணீர் செல்வதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள சுமார் 14 க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் அடங்கிய நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு கரையோர கிராமங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். வெள்ள நீரால் மக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக அவர்களை மாற்று இடத்தில் தங்க வைப்பதற்கான மாற்றிடவும் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது மாவட்ட நிர்வாகத்தால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள முகாமிற்கு செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட நீரால் சுமார் 250 ஏக்கர் நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் நீரில் மூழ்கியது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் 1.50 லட்சம் கன அடி நீர் வரத்து உள்ள காரணத்தினால் கோவிந்தபுத்தூர், அறங்கேட்டை, அனைக்குடி, முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் சுமார் 250 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது. இதனை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu