மின்சாரம், குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தடையில்லா மும்முனை மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க கோரி அதிகாரிகளை கண்டித்து ஊர் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் கடந்த 20 நாட்களாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் விட முடியாமலும், குடிக்க குடிநீர் இல்லாமல் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள் தெரிவிக்கும்போது இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளது. நீர்த்தேக்க தொட்டியில் மோட்டார் மூலம் நீரேற்ற முடியாமல் மின்மோட்டார் பழுதடைந்து உள்ளதாலும், மின்சாரம் இல்லாததாலும் குடிக்க குடிநீர் மற்றும், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இல்லாமலும் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் ராஜா ரவி சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் மின்சார உதவி செயற்பொறியாளர் ஜெயங்கொண்டம் சாந்தி, தா.பழூர் இளையராஜா, தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா, திட்ட இயக்குனர் சந்தானம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மின்சார ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பு வழங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture