அரியலூரில் 3616 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி

அரியலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிமையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலைஅலுவலர்களுக்கான பயிற்சிவகுப்பு நடைபெற்றது.

சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலயொட்டி, அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 376 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 377 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், மேற்காணும் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர், நிலை அலுவலர் -1, நிலை அலுவலர் -2, நிலை அலுவலர் -3 ஆகியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு (Randomization) முறையில் ஒதுக்கீடும் செய்யும் பணி 23.03.2021 அன்று நடைபெற்றது.

அதன்படி, 20 சதவீத இருப்புடன் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 753 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் 904 வாக்குச்சாவடி அலுவலர்கள், 904 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் -1, 904 நிலை அலுவலர்கள் 2, மற்றும் 904 நிலை அலுவலர்கள் 3 ஆகிய பிரிவுகளின் கீழ் பணியாற்றும் 3616 அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட தொகுதியில் பயிற்சி நடைபெற்றது.

அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் த.ரத்னாநேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும், மாதிரி வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் படிவங்களை கையாளுவது குறித்தும், மின்னணு வாக்குப்புதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், அனைத்து அலுவலர்களும் இப்பயிற்சி வகுப்னை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தேர்தல் தொடர்பான சந்தேகங்களை முழுமையாக தெரிந்துகொண்டு சுமூகமான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), வட்டாட்சியர்கள் ராஜமூர்த்தி (அரியலூர்), கலைவாணன் (ஜெயங்கொண்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்