1.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் விசாரணை

1.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் விசாரணை
X

பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்துடன் ரேஷன் அரிசி பதுக்கிய மோகன்.

அரியலூரில் 1.4 டன் ரேஷன் அரிசி பதுக்கியதாக ஒருவரை கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், வி. கைகாட்டி, விளாங்குடி ஆகிய பகுதிகளில் திருச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் அரியலூர் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் குடிமைப்பொருள் வழங்கல் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், கடத்தல் தொடர்பான குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டார்.

விளாங்குடி கிராமத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த TN61 / V8005 என்று பதிவு எண் கொண்ட டாட்டா மினி லோடு வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

வாகனத்தின் உரிமையாளரான மேலவரப்பன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகன் மோகன் என்பவரை விசாரணை செய்தபோது, அவர் குடும்ப அட்டைதாரர்கள் இடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதனை கால்நடைகளுக்கான தீவனத்திற்கு மாவாக அரைத்து அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதற்காக கொண்டு செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து மோகன் என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் அதிலிருந்த 1400 கிலோ ரேஷன் அரிசியையும் கைப்பற்றி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!