பொங்கல் பண்டிகையையொட்டி கிராம ஊராட்சிகளில் சிறப்பு தூய்மை இயக்கம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி.
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் கடிதத்தின்படி, ஊரக உள்ளாட்சி கட்டடங்களில் சிறுபழுது மற்றும் பெரும்பழுது நீக்கம் செய்து புதுப்பிக்க அரசாணையின்படி, ஊரகக் கட்டடங்களை பராமரிப்பது என்பது ஊராட்சிகளின் கடமைகளில் ஒன்று எனவும், ஊராட்சிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் கட்டடங்கள் பராமரிப்பதன் மூலம் அவைகளின் பயன்பாட்டுக்காலம் அதிகமாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு ஊரகப்பகுதிகளில் எதிர்வரும் பொங்கல் திருநாளையொட்டி (14.01.2022) அனைவரின் பங்கேற்புடன் ஒரு சிறப்பு இயக்கமாக பல்வேறு தூய்மைப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களுக்கு வண்ணம் பூசுதல். மூன்று ஆண்டுகளுக்கு முன் வர்ணம் பூசப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் அனைத்தையும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களின் முழு ஒத்துழைப்புடன் மீண்டும் வர்ணம் பூசி புதுப்பொலிவோடு வைக்கவும், இவ்வாறு வண்ணம் பூசுதல் பணி மேற்கொள்ளும்போது பயன்படுத்தாத நிலையில் உள்ள கட்டடங்களையும், கடந்த மூன்றாண்டுகளில் புதிதாக கட்டப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களையும் தவிர்த்து மீதமுள்ள ஊராட்சி மன்ற கட்டடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டடங்களில் புதுப்பித்தல் பணிக்கு (ஒரு நிலை) வண்ணம் பூசுதல் மற்றும் பெயிண்டினால் அலுவலகப் பெயர் எழுதுதல் மட்டும்) ஆகும் நிதியினை உரிய விதிமுறைகளைப் பின்பற்றியும் அசல் மதிப்பீடுகளை தயாரித்தும் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணியினை மேற்கொள்ள ஆகும் தொகையினை ஊராட்சி நிதி (கணக்கு எண் 1 அல்லது 2) மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் அனுமதிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தொட்டிகளை சுத்தம் செய்தல்: மேலும், நீர்த்தேக்கத்தொட்டிகளை மாதமிருமுறை அதாவது பிரதி 5ம் தேதி மற்றும் 20ம் தேதி அன்று முறையே சுத்தம் செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழர்திருநாள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்து பராமரிக்க ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குநர்கள் மற்றும் இதர பணியாளர்களை ஈடுபடுத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொசுக்களினால் பரவும் நோய்களை முழுவதுமாக தடுத்திடும் நடவடிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிராமத்தில் உள்ள சந்துகள், தெருக்கள், கிராம சாலைகள் மற்றும் கிராமங்களை ஒட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பைகளை ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இணைந்து, ஒருங்கிணைந்த இயக்கமாக செயல்பட்டு முற்றிலும் அகற்றி, சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினிகளை தெளித்து தூய்மையாக வைத்திருக்கவும், வடிகால்கள் மற்றும் சாக்கடை செல்லும் பாதைகளை சுத்தப்படுத்தி, அடைப்புகளை அகற்றி கொசுமருந்து தெளித்து டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊராட்சி மன்ற கட்டடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டடங்களில் தேவையின்றி இருக்கும் பழைய, பயன்படுத்த இயலாத, குப்பையாக கிடக்கும் வீண்பொருட்களை முற்றிலும் அகற்றி அலுவலகங்களை சுத்தமாக வைத்திருக்கவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் கோப்புகளை கையாளும்போது கோப்பின் தன்மையை பொறுத்து, பார்வை 3-ல் கண்ட கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றி ஒராண்டு, மூன்றாண்டு, பத்தாண்டு மற்றும் நிரந்தர முடிவு என வழிவகைசெய்து நீக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரம் நடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு ஊராட்சிக்கு 100 மரக்கன்றுகள் வீதம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊரகப் பகுதிகளிலும் சுற்றுச்சுவருடன் கூடிய ஊராட்சிமன்ற கட்டடங்கள், ஒன்றிய அலுவலக கட்டடங்கள், பள்ளிக்கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் போன்ற இடங்களில் நடுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் ஊதிய விகிதத்தின்படி செயல்படுத்தவும், வேம்பு, புங்கன், மா மற்றும் கொய்யா போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் மற்றும் மரப்பாதுகாப்பு வளையங்கள் ஆகியவற்றை வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை திட்டங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெறவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒமிக்கிரான் தடுப்பு நடவடிக்கைகள்: பொது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், முகக்கவசம் முறையாக அணியவும், கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், ஒமிக்கிரான் போன்ற தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், தொடர்புடைய அலுவலர்களை ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்துதல்: மேற்கூறிய அனைத்து பணிகளை மேற்கொள்ளும் போது உரிய பொறுப்பு அலுவலர்கள் கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி வாரியாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பினையும் பணிகளின் தரத்தையும் உறுதி செய்திட வேண்டும்.
இச்சிறப்பு இயக்கத்தை அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தையும் ஆவணப்படுத்தியும் (புகைப்படங்கள், வீடியோ, பத்திரிகை செய்தி போன்றவை) மேற்கொள்ள உரிய விதிமுறைகளின்படி செலவினம் மேற்கொள்ளவும், இப்பணிகளை செயல்படுத்திட வட்டார ஊராட்சிக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(வ.ஊ)-ஐ பொறுப்பாக்கியும், கண்காணிப்பு செய்திட தொடர்புடைய மண்டல அலுவலர்களை நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பணிகளை கண்காணித்திட ஊராட்சி வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமித்து அறிக்கை அளித்திட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தையும் 13.01.2022-க்குள் முடித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu