தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டி- அரியலூர் கலெக்டர் அறிவிப்பு
அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி.
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியத் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022-ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ''எனது வாக்கு எனது எதிர்காலம் ஒருவாக்கின் வலிமை'' என்ற கருப்பொருளைமையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டியை தொடங்கியது. இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்கமுறையான அறிவூட்டல் - SVEEP என்ற திட்டத்தின் மூலமாக மக்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை இப்போட்டியில் பங்கேற்கச் செய்வதின் வாயிலாக மக்களாட்சியின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. இதில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். மக்களாட்சியில் ஒவ்வொருவாக்கும் முக்கியமானது என்ற கருப்பொருளைமையமாகக் கொண்டு மக்களின் ஏராளமான படைப்புகளை வரவேற்கிறது.
எனது வாக்கு எனது எதிர்காலம் - ஒருவாக்கின் வலிமை, தேசிய அவளவிலான போட்டியில், வினாடிவினாப் போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டுப் போட்டி, காணொலிகாட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பர படவடிவமைப்புப் போட்டி என ஐந்து பிரிவுகள் உள்ளன.
நாட்டின் தேர்தல் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வினை அளவிடும் பொருட்டு பங்கேற்பாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ள வேண்டும். போட்டியில் மூன்று நிலைகள் எளிதான, இடைநிலை மற்றும் கடினம் உள்ளன. போட்டியின் மூன்று நிலைகளும் நிறைவடைந்ததும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின்னுண சான்றிதழ் வழங்கப்படும்.
வாசகம் எழுதும் போட்டி: மேற்குறிப்பிட்ட கருப்பொருளில் பிறரை ஊக்கப்படுத்தும் வகையிலும் அனைவரையும் கவரக்கூடிய வகையிலும், வாசகத்தை அமைத்து இப்போட்டியில் பங்குபெறுங்கள்.
பாரம்பரிய இசைப் பாடல்கள், தற்காலபாடல்கள், ராப், போன்ற யாதொரு வடிவத்திலும் ஒரு பாடலின் வாயிலாக படைப்பாற்றல் உள்ளவர்களின் திறமையையும், ஆற்றலையும் வெளிக்கொண்டு வருவதை பாட்டுப்போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கேற்பாளர்கள் கொடுக்கப்பட்டுள்ள கருப்பொருளின் அடிப்படையில் புதிய பாடல்களை உருவாக்கி இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். கலைஞர்களும் பாடகர்களும் தங்கள் விருப்பப்படி எந்தவொரு இசைக்கருவியையும் பயன்படுத்தலாம். பாடலின் கால அளவு 3 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தியத் தேர்தல்களின் பன்முகத் தன்மை மற்றும் தேர்தல் திருவிழாவை கொண்டாடும் வகையில் காணொலிக்காட்சி ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்து நிழற்படக் கருவி ஆர்வலர்களுக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. போட்டியின் கருப்பொருள் தவிர,பின்வரும் தலைப்பிலும், போட்டியாளர்கள் காணொலி தயாரிக்கலாம். தகவலறிந்த மற்றும் நெறிசார்ந்த வாக்களிப்பின் முக்கியத்துவம் (நேர்மையான வாக்களிப்பு) மற்றும் வாக்கின் வலிமை: பெண்கள், மாற்றுத்திறனாளிகள். மூத்தகுடிமக்கள், இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாகவும் இருக்கலாம்.
மேற்கண்ட கருப்பொருள் தொடர்பாக ஏதேனும் ஒன்றில் போட்டியாளர்கள் காணொலிக்காட்சி ஒன்றை உருவாக்க வேண்டும். அந்த காணொலிக்காட்சியானது ஒரு நிமிட கால அளவில் மட்டுமே இருக்க வேண்டும். காணொலி, பாடல், வாசகம் எழுதும் போட்டிகளுக்கான பதிவுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு அலுவல் மொழியிலும் அளிக்கப்படலாம்.
விளம்பரப் படவடிவமைப்புப் போட்டியானது, சிந்தனையைத் தூண்டக்கூடிய விளம்பரப் படம் தயாரிக்கும் கலை மற்றும் வடிவமைப்பில் ஆர்வமுடையவர்களுக்கானது. போட்டியாளர்கள் கருப்பொருள் குறித்த எண்மமுறை விளம்பரப் படம் (Digital Poster) ஓவியம் அல்லது கையால் வரையப்பட்ட விளம்பரப் படத்தினை சமர்ப்பிக்கலாம்.
நிறுவனம் சார்ந்த நபர்களுக்கான போட்டிவகை என்பது, தொடர்புடைய மத்திய அல்லது மாநில அரசு சட்டத்தின் கீழ் பதிவுப்பெற்ற பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வியியல் நிறுவனங்கள், அமைப்புகள் என பொருள்படும்.
தொழில் சார்ந்தவர் வகை என்பது, காணொலிக்காட்சி உருவாக்குதல், விளம்பரப் படம் வடிவமைத்தல், பாடுதல் போன்ற ஏதேனும் ஒரு தொழிலினை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் அல்லது காணொலிக்காட்சி உருவாக்குதல், விளம்பரப் படம் உருவாக்குதல், பாடுதல் போன்ற தொழில்களில் யாதொரு விதத்திலாவது பணிபுரிந்து முதன்மை வருவாய் ஈட்டக்கூடியவர்கள் தொழில் சார்ந்தவர்களுக்கான வகை என்று கருதப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர் தான் தொழில் சார்ந்தவர் வகை என்பதை உறுதிசெய்யும் பொருட்டு அதற்குரிய சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தொழில்சாராதவர் வகை என்பது, காணொலிக்காட்சி உருவாக்குதல் விளம்பரப் படம், வடிவமைத்தல், பாடுதல் போன்றவற்றை ஆக்கப்பூர்வமான ஒருபொழுது போக்கிற்காக மேற்கொண்டு, ஆனால் தனது முதன்மை வருமானத்தை வேறு சில வழிகளில் இருந்து ஈட்டும் போட்டியாளர் பங்கேற்கும் வகை தொழில் சாராதவர் வகை எனக் கருதப்படும்.
விருதுகள், அங்கீகாரங்கள்: பாட்டுப் போட்டி, காணொலிக்காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பரப் படம் வடிவமைப்பு போட்டி ஆகியவை நிறுவனம் சார்ந்த நபர்கள், தொழில் சார்ந்தவர் மற்றும் தொழில் சாராதவர் ஆகிய மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு அற்புதமான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிடத்தக்க சிறப்புப் பிரிவின் கீழ் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். நிறுவனம் சார்ந்த நபர்கள் என்ற பிரிவில் 4 சிறப்புப் பரிசுகளும், தொழில் சார்ந்தவர் மற்றும் தொழில் சாராதவர் என்றபிரிவில் தலா 3 சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும்.
பங்கேற்பாளர் போட்டியின் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் https://ecisveep.nic.in/contest/ என்ற வலைதளத்தில் பார்வையிடலாம். பங்கேற்பாளர்கள், போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விபரங்களை voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பங்கேற்பாளர்கள் தாங்கள் விண்ணப்பிக்க இருக்கும் போட்டியின் பெயர் மற்றும் பிரிவு ஆகியவனவற்றை மின்னஞ்சலின் பொருள் பகுதியில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
வினாடிவினாப் போட்டியில் பங்கேற்பதற்கு. பங்கேற்பாளர்கள் போட்டிக்கான வலைதளத்தில் பதிவு செய்யலாம். போட்டி தொடர்பான அனைத்து பதிவுகளும் பங்கேற்பாளர்களின் விபரங்களுடன் இணைத்து, மார்ச் 15, 2022ஆம் தேதிக்குள் voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியின் வலைதளத்தை (QR Code) வாயிலாக பார்வையிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu