அரியலூர்: ரூ.10.27கோடி மதிப்பில் நலத்திட்டஉதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

அரியலூர் மாவட்டதில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் 1,296 பயனாளிகளுக்கு ரூ.10.27 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
அரியலூர், அண்ணலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் நடைபெற்ற நிகழ்வில் , வருவாய்த்துறையின் சார்பில் ,இலவச வீட்டுமனைப்பட்டா, ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், புதிய குடும்ப அட்டை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 1,296 பயனாளிகளுக்கு ரூ.10.27 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.
பின்னர் , அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் பெற்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் தனி அலுவலர் ஒருவரை நியமித்து, மாவட்டந்தோறும் பெறப்பட்ட மனுக்கள் துறை வாரியாக பிரிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றபொழுது, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வகையான நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டதன் அடிப்படையில், தற்பொழுது கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சாமானிய மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் பொதுமக்களை அடைகிறதா என்பது குறித்தும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்கள்.
அதன் அடிப்படையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்காக குறிப்பிட்ட நாளில் காவேரி டெல்டா பாசன வசதிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்து வைத்தார்கள். இப்பாசன நீரானது அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் காவேரி டெல்டா மாவட்டங்களை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு தூர்வாரும் திட்டத்தை செயல்படுத்தி, காவேரி கடைமடை பகுதிக்கும் நீர் செல்வதை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல்லினை உரிய காலத்தில் கொள்முதல் செய்யும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை மற்ற இடங்களுக்கு உரிய காலத்திற்கு அனுப்பிவைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சாமானிய மக்களின் தேவைகளை அறிந்துள்ள நமது தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் வரப்பெற்ற பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை விரைந்து நிறைவேற்றிட அறிவுறுத்தியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் 1,296 பயனாளிகளுக்கு ரூ.10.27 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுள்ள பொதுமக்கள் அனைவரும் அதனை முறையான பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்ளுமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
இதில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் ஏழுமலை, ஒன்றியக்குழுத்தலைவர் சுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அ.பூங்கோதை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu