சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைப்பு
அரியலூர் மாவட்டத்தில் ரூ.129 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், அரியலூரில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சாலை மேம்பாட்டுப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் வகையில் சுமார் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை பகுதிவாரியாக இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக தரம் உயர்த்துதலில், நடப்பு நிதி ஆண்டு 2021-22-ல் சுமார் 255.02 கி.மீ நீளம் உள்ள சாலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நெடுஞ்சாலை கோட்டத்தில் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலை (வழி) செந்துறை கி.மீ 2/0-19/2 வரை 17.20 கி.மீ உள்ள சாலையை ரூ.129 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணி இன்றைய தினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இச்சாலை மேம்பாடு செய்யும் வழித்தடத்தில் உள்ள கொல்லாபுரம், தாமரைக்குளம், ஒட்டக்கோவில், பொய்யாதநல்லூர், இராயம்புரம் மற்றும் அகரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் சுமார் 6.90 கி.மீ நீளத்திற்கு கட்டப்படவுள்ளது. இச்சாலையில் 13 சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் மற்றும் 38 சிறுபாலங்கள் புதியதாக கட்டப்படவுள்ளன. சாலையின் இரு மருங்கிலும் 3400 மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வழித்தடமாக அமையும். இப்பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ.129 கோடிக்கு 27.06.2022-ல் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணியானது 21 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு சுரங்கங்களிலிருந்து சுண்ணாம்பு ஏற்றுச்செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இச்சாலை பயன்பாட்டிற்கு வரும்பொழுது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் உத்தரண்டி, உதவி கோட்டப்பொறியாளர் சிட்டிபாபு, உதவிப்பொறியாளர் இளையபிரபு, வட்டாட்சியர் குமரையா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu