உள்ளாட்சித் துறை ஏஐடியூசி பணியாளர்கள் அரியலூரில் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சித் துறை ஏஐடியூசி பணியாளர்கள் அரியலூரில் ஆர்ப்பாட்டம்
X

ஏஐடியூசி தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

துப்புரவு பணியாளர்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் சேமநலநிதி இருப்பு கணக்கு முறையாக வழங்கப்படாமல் உள்ள நிலையை போக்க வேண்டும்.

அரியலூர் மாவட்ட உள்ளாட்சி ஏஐடியூசி தொழிலாளர் சங்கம் சார்பாக அரியலூர் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளரும், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன நிர்வாக குழு உறுப்பினருமான தண்டபாணி தலைமை வகித்தார். அரியலூர் நகராட்சி மாரியப்பன், சிவஞானம் ஜெயங்கொண்டம் சிலம்புச் செல்வி, டி. பழூர் காமராஜ், ஜமீன் சுத்தமல்லி பாப்பாத்தி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமானூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் தனசிங், விஜி, நாகூரான், சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். உள்ளாட்சித்துறை பணியாளர்களுக்கான கோரிக்கைகளை விளக்கி தண்டபாணி சிறப்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்.

பெருகிவரும் மக்கள்தொகை, குடியிருப்புகளுக்கு ஏற்ப ஏற்கனவே அரசாணை பிறப்பித்த அளவுகோல் (நார்ம்ஸ்) அடிப்படையில் தேவையான துப்புரவு பணியாளர் காலிப் பணியிடங்களை கண்டறிந்து கணக்கிட்டு, அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை கொண்டு நிரப்பி டைம்ஸ்கேல் ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும்.

துப்புரவு பணியாளர்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் சேமநலநிதி இருப்பு கணக்கு முறையாக வழங்கப்படாமல் உள்ள நிலையை போக்கி அனைவர்களுக்கும் இருப்புக் கணக்கு முறையாக வழங்கப்பட வேண்டும்.

அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு இருபத்தி ஏழு மாத கால மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலி நிலுவைத் தொகையை திருச்சி தொழிலாளர் துணை ஆணையர் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டவாரறு அமலாக்கபட வேண்டும்.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ஐம்பத்தி நான்கு மாதகாலமாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலிக்கான சம்பளத்தை அமுலாக்காமல் குறைந்த கூலி கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு கலெக்டர் அறிவித்த சம்பளத்தை அரியருடன் அமலக்கப்படவேண்டும்

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் OHT ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அவர்களுடைய ஊதியத்தை உயர்த்தியும், மேலும் பிஎஃப், கிராஜுவிட்டி, பென்சன், சீருடை, மருத்துவ காப்பீடு ஆகிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

தமிழக அரசு போதிய நிதி முன்பணமாக வழங்கி நகராட்சி ,பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் மாதச் சம்பளம் வழங்குவதில் காலதாமதத்தை போக்கிட மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும்.

கொரோனா காலத்தில் மூன்று மாத ஊக்கத்தொகை தமிழக அரசு அறிவித்தது. அதை விரைவில் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அரியலூர் நகராட்சியில் பணி ஓய்வு, பணியிடை மரணம் ஆகிய குடும்பத்தினருக்கு உரிய பணப் பயன்கள், வாரிசு வேலை காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்கப்பட வேண்டும். ESI குடும்ப அட்டை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிந்த உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் முதலமைச்சருக்கான கோரிக்கை மனுவை அளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் நகராட்சி, கிராம ஊராட்சி தூய்மை காவலர்கள், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!